இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பஸ் தீப்பிடித்து 45 பேர் பலி

bus1

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தனியார் சொகுசு பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் குழந்தை உள்பட 45 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். டீசல் டேங்கில் தீப்பிடித்ததால் நிகழ்ந்த இவ்விபத்தில் அந்த பஸ் எரிந்து சாம்பலானது.

பெங்களூருவில் இருந்து ஜப்பார் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு வால்வோ பஸ் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு ஹைதராபாத் நோக்கிப் புறப்பட்டது. பஸ்ஸில் 50 பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர்.

இந்த பஸ் புதன்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாளையம் என்ற பகுதிக்கு அருகே உள்ள சிறிய பாலத்தின் தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதைத் தொடர்ந்து அந்த பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில், பஸ்ஸில் இருந்த 45 பேர் தீயில் கருதி உயிரிழந்தனர். அவர்களில் சிலர் சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.

இது குறித்து ஹைதராபாத் சரக காவல்துறை டி.ஐ.ஜி. வி.நவீன் சந்த் கூறுகையில், “”பஸ்ஸில் இருந்து 45 கருகிய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் தீயில் சிதைந்துள்ளன. இறந்தவர்களில் எத்தனை பேர் ஆண்கள் அல்லது பெண்களை என்பதைக் கூட கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

எனினும், இந்த விபத்தில் பஸ்ஸின் ஓட்டுநர் ஃபெரோஸ் கான், உதவியாளர் அயாஸ் மற்றும் 5 பயணிகள் தீக்காயங்களுடன் உயர் தப்பினர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மற்றொரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகளை மஹபூப்நகர் மாவட்ட ஆட்சியர் கிரிஜா சங்கரும், காவல்துறை எஸ்.பி. நாகேந்திரகுமாரும் நேரடியாகக் கண்காணித்தனர். அவர்கள் கூறுகையில், “”உயிரிழந்தவர்களின் அடையாளமானது, மரபணுச் சோதனைகள் மற்றும் உறவினர்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்த பின்பே உறுதிப்படுத்தப்படும். மரபணுச் சோதனைக்குப் பின், பலியானவர்களின் உடல்கள், அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஹைதராபாத் காந்தி மருத்துவமனை மற்றும் உஸ்மானியா பொது மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்களும், தடயவியல் நிபுணர்களும் விபத்துப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

வனபர்த்தி காவல்துறை டி.எஸ்.பி. சீனிவாஸ் ரெட்டி கூறுகையில், “”விபத்து நிகழ்ந்தபோது அந்த பஸ் அதிவேகமாச் சென்றிருக்க வேண்டும். அதனாலேயே பாலத்தின் மீது டீசல் டேங்க் மோதியதால் அதில் தீப்பிடித்து வெடித்துள்ளது. பஸ் முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

தனியார் பஸ் நிறுவனத்தாரிடம் இருந்து பயணிகளின் பெயர்ப் பட்டியலைச் சேகரித்துள்ளதாகவும், ஆன்லைன் பதிவுப் பட்டியலில் 33 பயணிகளின் பெயர்கள் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். மற்ற பயணிகள் வழியில் ஏறியிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பயணி கூறுகையில், “”பஸ்ஸில் தீப்பிடித்தபோது பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். எங்களில் சிலர் கண்ணாடி ஜன்னல்களை உடைக்க முயன்றோம். ஆனால், முடியவில்லை. நான் உடனடியாக அவசரகால ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே குதித்து விட்டேன்” என்றார்.

காயமடைந்த பேருந்து உதவியாளர் அயாஸ், ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விபத்து குறித்துக் கூறுகையில், “”பஸ்ஸில் இருந்து என்னை, அவ்வழியாகச் சென்ற கார் ஒன்றின் டிரைவர்தான் இழுத்து வெளியில் போட்டார். அதனால் நான் பிழைக்க முடிந்தது” என்று தெரிவித்தார்.

இதனிடையே, பஸ் பயணிகளின் உறவினர்கள் கவலையோடு ஹைதராபாதில் உள்ள ஜப்பார் டிராவல்ஸ் நிறுவன அலுவலகத்தில் குவிந்தனர். தங்கள் உறவினர்கள் குறித்த தகவல்களை அவர்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்திலும் பயணிகளின் குடும்பத்தாரும், உறவினர்களும் திரண்டனர். அவர்கள் கவலையோடு விவரங்களை விசாரித்தனர். தங்களின் வால்வோ பஸ் நல்ல நிலையில் இருந்ததாகவும், அதற்கு உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் ஜப்பார் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தும் உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஜமீல் ஜப்பார் கூறியுள்ளார்.

பிரதமர் இரங்கல்: ஆந்திர பஸ் விபத்தில் 45 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக ஆளுநர் ரோசய்யாவும் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>