(முஹம்மத் பகீஹுத்தீன்)
இன்னும் சில நாட்களில் ஹஜ்ரி 1435ம் ஆண்டு மலரப்போகிறது. கடந்த ஆண்டை மீளாய்வு செய்து இந்த ஆண்டிற்காக திட்டமிட பெருத்தமான நேரம் இது. அழிந்து போகும் வாழ்விற்கு திட்டமா? என்ன இது என உள்ளம் கேள்வி எழுப்பும். ஆனால் வாழ்கையில் இலக்கு நோக்கி பயணிக்க திட்டம் போடுவது ஒரு கட்டாயக் கடமை என்பதை வாழ்வியல் நியதி வேண்டி நிற்கின்றது.
இறைவேதம் அல்குர்ஆன் திட்டமிட்ட வாழ்வே அர்த்தமுள்ளதாக அமையும் என அழுத்தமாக கூறுகிறது.
வாழ்கை ஒரு சோதனைக் களம் என்பதே இஸ்லாம் கற்றுத்தரும் பாடம். பரீட்சை முடிய முன்பு திட்டமிட்டு மிகச்சரியாக செயற்பட அது தூண்டுகிறது. ஓவ்வொரு ஆத்தமாவும் நாளைய நிரந்தர வாழ்விற்காக முன்கூட்டியே என்ன சமர்ப்பித்துள்ளது என்பதை நோக்கட்டும் என இறை மறை போதிக்கின்றது. இது திட்டமிடலை வேண்டி நிற்கின்ற ஒரு விடயம். இறை தூதரின் ஒவ்வொரு நகர்வும் திட்டமிட்ட இலக்கு நோக்கிய பயணமாகவே காணப்படுகிறது.
வாழ்கை பயணத்தில் ஒரு மீள்பார்வை
வாழ்வின் பொருள் என்ன? வாழ்கைக்கான இலக்கு என்ன? அடுத்து வரும் ஆண்டின் எமது திட்டம் யாது? கடந்த ஆண்டின் செயற்பாடுகளை மீள்பார்வை செய்துள்ளோமா? இவை இந்த புத்ததாண்டில் நுழைய முன்பு உள்ளத்தை கேட்கவேண்டிய கேள்விகள்.
வாழ்கை என்பது சில நாட்கள். ஒரு நாள் கழியும்போது உன்னில் ஒரு பகுதி நீங்கிவிடுகிறது. நீ ஒரு எட்டு முன்னெடுத்து வைக்கும்போது புதைகுழியை நோக்கி நெருங்குகிறாய்.
இறுபதுகளின் மைந்தர்களே உங்கள் வயதை ஒத்த சகபாடிகள் எங்கே? அவர்களை மரணம் தழுவில்லையா?
முப்பதுகளின் வாரிசுகளே உங்கள் வாலிபம் கைநழுவிப்போகிறது. கவலை வரவில்லையா?
நாற்பதுகளின் சொந்தக்காரர்களே! இளமை சென்றுவிட்டது இன்னும் விளையாடுவதா?
ஐம்பதுகளில் வாழ்பவர்களே! பாதி முடிந்துவிட்டது மீதியில் என்ன செய்யப்போகிறீர்கள்.
அறுபதுகளின் ஆன்மாக்களே! மரணச் சந்தைக்குள் நுழைந்து விட்டீர்கள். இன்னுமா அலட்சியம்?!
இந்த ஆண்டின் இறுதி நாட்கள் நற்செயல்களுடன் முடிவடைவது எவ்வளவு நல்லது. அடுத்த ஆண்டின் ஆரம்பம் இறைவழிபாடுகளுடன் துவங்குவது எவ்வளவு அழகானது.
சுயவிசாரனை
மரணமில்லா வாழ்கைக்காக செயற்படுபவன் புத்திசாலி. இச்சைக்கு அடிமைப்பட்டு, மனம் போன போக்கில் செல்பவன் முட்டாள். எனவே நாம் அறிவாளிகளாக செயற்படுவோம்.
சுயவிசாரனை என்பது யாது? அறிஞர் மாவர்தி இப்படிக் கூறுகிறார். ‘ஒவ்வொரு ஆத்மாவும்; பகல் பொழுதில் செய்த காரியங்களை இரவில் புரட்டிப்பார்க்கும். அவை பாராட்டுக்குரியதாக இருந்தால் தொடரும் படி உள்ளத்தை பணிக்கும். இழிந்ததாக இருந்தால் நிறுத்திக் கொள்ளுமாறு கட்டளையிடும்’.
சுயவிசாரனை இல்லாத வாழ்வு சீர்கேட்டில் மூழ்கிவிடும். விசாரனையை விருப்பத்தோடு எதிர்பார்க்காதவர்கள் வாழ்கையில் தோற்றுப்போவார்கள் என அல்குர்ஆன் கற்றுத்தருகிறது.
கொஞ்சம் கவனியுங்கள்
மனிதா! நீ உனது வாழ்வை திரும்பிப்பார்த்ததுண்டா? மேடு பள்ளங்களை அடையாளம் கண்டு கொண்டாயா? நன்மைகளை கணக்கிடுவது போன்று உன் தவறுகளை எண்ணி எண்ணிப்பார்த்த துண்டா? இத்தனை சுமைகளுடன் இறைவன் முன் விசாரனைக்கா நிற்க உன்னால் முடியுமா? சிந்திக்க வேண்டிய தருணம். பின்னர் கைசேதப்படுவதில் அர்த்தமில்லை.
சுயவிசாரனைக்கு பல வழிகள் இருக்கலாம். இது ஒரு வழியாக அமையட்டும்.
1) கடமையான வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்துவோம். ஐங்காலத் தொழுகை, ரமழான் நோன்பு, போன்ற கடமைகளில் குறை இருக்கிறதா எனப்பார்ப்போம். முதலில் அதனை சீர்செய்து கொள்வோம்.
2) பாவங்கள் வாழ்வின் கறைபடிந்த பக்ககங்கள். அதை தௌபாவின் மூலம் அகற்றிவிடுவோம். நன்மைகள் அதிகம் செய்து தீமைகளை மிகைப்போம்.
3) அவையவங்களை விசாரனை செய்வோம். கை, கால், கண், காது, வாய், வயிறு என அனைத்து உறுப்புக்களையும் விசாரிப்போம். யார் விருப்பத்திற்காக செயற்படுகறது என்பதை அவதானிப்போம். இறை திருப்தியை அடிப்படியாக கொண்டுள்ளதா என்பதை உன்னிப்பாக கவனிப்போம்.
4) பொடுபோக்கு, அலட்சியமாக வாழ்வது பெருந் தவறு என்பதை உணர்வோம். இறை நினைவால் உள்ளத்தை நிறப்புவோம்.
5) ஒவ்வொரு செயலுக்கு முன்பும் பின்பும் விசாரனை செய்யும் பழக்கத்தை உருவாக்குவோம்.
மலவிருக்கும் புத்தாண்டு சுயவிசாரனையுடன் ஆரம்பமாகட்டும். இலக்கு நோக்கிய பயணமாக அமையட்டும். இந்த ஆண்டின் இலக்கு உயர்ந்த சுவர்க்கமாக ஏன் இருக்கக் கூடாது?
மலர்ந்தும் மலராத இந்த வாழ்வு நிறைவேறாத ஆசைகளுடன் பாதியிலே வாடிவிடும். ஆனால் ஆன்மா மரணிப்பதில்லை. அது மீண்டும் மண்ணறையில் இருந்து எழுந்து வரும். விடிந்தும் விடியாத ஒரு காலைப் பொழுது அல்லது மறைந்தும் மறையாத ஒரு மாலைப் பொழுது தான் வாழ்ந்தோம் என்று கூறும். இது தான் சத்தியம். இந்த குறுகிய உலக வாழ்வு சோசம் நிறைந்ததாகவே இருக்கும். இந்த உண்மையை புரிந்து கொள்வோம். அதில் வசந்தத்திற்கான பாதையை அமைத்துக் கொள்வதே மனித வாழ்வின் திட்டமாக அமைய வேண்டும்.
Leave a Reply