பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு பற்றிய முழுமையான தொகுப்பு

chogm 2013

(அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்)

பொதுநலவாய நாடுகள் என்றால் என்ன?

பொதுநலவாய நாடுகள் (Commonwealth Nations) என்பது பிரித்தானியாவின் நேரடி அல்லது மறைமுக ஆட்சியின் கீழிலிருந்து பின்னர் சுதந்திரமடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகும். இது உலகில் பழைமை வாய்ந்த அரசியல் கூட்டமைப்புக்களில் ஒன்றுமாகும். இந்த நாடுகள் இணைந்து 1949 ஆம் ஆண்டு பொதுநலவாயத்தை ஸ்தாபித்தன. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது இதில் 8 நாடுகளே அங்கத்துவத் தைப் பெற்றிருந்தன.

பொதுநலவாயத்தில் தற்போது 19 ஆபிரிக்க நாடுகளும், 11 தென் பசுபிக் நாடுகளும், 10 கரீபியன் நாடுகளும், 8 ஆசிய நாடுகளும், 3 அமெரிக்க நாடுகளும், 3 ஐரோப்பிய நாடுகளும் அங்கத்துவம் பெற்றுள்ளன. பிரித்தானிய சாம்ராஜ்யத்துடன் வரலாற்று ரீதியான உறவுகள் இல்லாதபோதும், ருவாண்டா, மொஸாம்பிக் ஆகிய நாடுகளும் அண்மையில் பொதுநலவாயத்தில் இணைந்து கொண்டுள்ளன. தற்போது மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 54 ஆகும்.

உலகப் பரப்பளவில் 29,958,050 KM2 அளவைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கின்ற பொதுநலவாயம் 2.245 பில்லியன் சனத்தொகையையும் கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவில் ஐரோப்பிய யூனியன் இயங்குவது போல் பொதுநலவாய யூனியன் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டுமென்று பொதுநலவாயத்தின் உறுப்பு நாடுகள் சில விரும்புகின்றன. இதன் போது இந்த யூனியனுக்குள் விஸா இன்றி பயணம் செய்தல், சுதந்திர வர்த்தகம், பொதுவான வெளியுறவுக் கொள்கை என்பனவும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவை விரும்புகின்றன.

பொதுநலவாய நாடுகள்

ஆன்டிகுவா- பார்புடா, அவுஸ்திரேலியா, பஹாமா, வங்களாதேசம், பார்படோஸ், பெலிஸ், பொட்ஸ் வானா, புரூனே, கெமருன், கனடா, சைப்பிரஸ், டொமினிகா, பிஜி, காம்பியா, கானா, கிரீனீடா, கயானா, இந்தியா, ஜமய்க்கா, கென்யா, கிரிபாடி, லெசத்தோ, மாலவி, மலேசியா, மாலைதீவுகள், மால்டா, மொரிசியஸ், மொசாம்பிக், நமிபியா, நப்ரு, நியூசிலாந்து, நைஜிரியா, பாகிஸ்தான், பப்புவா நீயுகய்னியா, செயின்ட் கிட்ஸ் அன் நெயிட்ஸ், செயின் லூசியா, செயின்ட வின்செட் அன்ட் இரிநாட்டில், சமோவா, கிகில்லிஸ், சியர்ரா லியோன், சிங்கப்பூர், கலமன் தீவுகள், தென்ஆபிரிக்கா, இலங்கை, சுவாசிலாந்து, தான்சானியா, டோங்கா, ட்ரினிடாட், அன்ட் டொபாக்கோ, டுவாலு, உகாண்டா, இங்கிலாந்து, வணுவாட்டு, ஸாம்பியா

பொது நலவாய நாடுகளின் முக்கிய குறிக்கோள்கள்

*              ஜனநாயகத்திற்கு வலுவூட்டல்

*              மனித உரிமைகளைப் பாதுகாத்தல்

*              நல்லாட்சியை ஏற்படுத்தல்

*              சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல்

*              தனிமனித உரிமைகளைப் பாதுகாத்தல்

*              மனித சமூக சமத்துவம் பேணுதல்

*              தாராள வர்த்தகம் நடத்ததல்

*              உலக சமாதானத்தை நிலை நிறுத்த துணை புரிதல்

பொதுநாலவாய பிரகடனம்

பொதுநலவாயத்தின் பிரகடனங்களான, சிங்கப்பூர் 1971 ஆம் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி“பொதுநலவாய கொள்கை”, 1991 ஆம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி “ஹராரி பிரகடனம்” யாவும் – சர்வதேச சமாதானம், உலக பொருளாதாரம், சர்வதேச விதிமுறைகள் போன்றவற்றை மதிக்குமாறு வலியுறுத்துகின்றன.

அவற்றுடன் சம அந்தஸ்து, தனியார் சுதந்திரம், இனவேறுபாடுகளுக்கு எதிரான கொள்கை, அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றையும் வலியுறுத்துகின்றன.

இவை மட்டுமல்லாது சிங்கப்பூர் 1971 ஆம் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி “பொதுநாலவாய கொள்கை”,சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்துகிறது.

இவற்றின் அடிப்படையிலேயே கடந்த காலங்களில் பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவத்திலிருந்து பிஜி, நைஜீரியா, பாகிஸ்தான், சியாரி லியோன், தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே போன்ற நாடுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டதுமல்லாது, சிம்பாப்பே பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவத்திலிருந்து தானாகவே நீங்கியுள்ளது.

துணை நிறுவனங்கள்

பொதுநலவாய நாடுகளின் அமைப்பு பல துறைகளிலும் தனது செயற்பாட்டை விஸ்தரித்துள்ளது. அந்த வகையில் அது பல துணை நிறுவனங்களை உள்ளடக்கி செயற்பட்டு வருகின்றது. அவற்றில் சில முக்கிய நிறுவனங்கள் பின்வருமாறு.

1. பொதுநலவாய இலக்கிய மற்றும் மொழியியல் கற்கைகளுக்கான கழகம்

2. பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் கழகம்

3. வரி நிர்வாகிகளுக்கான பொதுநலவாய

4. பொதுநலவாய கல்வி நிதியம்

5. பொதுநலவாய நிறுவனம்

6. பொதுநலவாய மனித உரிமைகள் நிறுவனம்

7. பொதுநலவாய சட்டத்தரணிகள் கழகம்

8. பொதுநலவாய மருத்துவக் கழகம்

9. பொதுநலவாய மருந்தாளர்கள் கழகம்

10. பொதுநலவாயக் கற்கைகளுக்கான நிறுவனம்

 நிர்வாகம்

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமையகம் லண்டனில் மார்லப்பரோ ஹவுசில் அமைந்துள்ளது.

தலைவர் 

இரண்டாம் எலிசபெத் மகாராணி பொதுநலவாயத்தின் தலைவியாக இருக்கிறார். இந்தத் தலைமைப் பதவி சில அடையாள செயற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. பொது நலவாயத்தின் தலைமைப் பதவியை வகிப்பதற்கு நிச்சயிக்கப்பட்ட தவணை முறைகள் கிடை யாது. பொதுநலவாயத்தின் தலைவர்கள் இணைந்துதான் அடுத்த தலைவரைத் தெரிவு செய்வர்.

செயலாளர்

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா ஆவார். இவர் ஐக்கிய இராச்சியத் துக்கான இந்திய உயர்த்தானிகராகக் கடமை புரிந்தவராவார்.

செயலாளர்தான் பொதுவெளியில் பொதுநலவாயத்தையும் பொதுநலவாய செயலகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் பொறுப்பைப் பெற்றவராவார். பொதுநலவாயத்தின் செயலாளர் பொதுநலவாயத்தின் தலைவர்களால் பிரேரிக்கப்படுவார். இவர் நான்கு வருடங்களைக் கொண்ட இரண்டு தவணைகளுக்கு பணியாற்ற முடியும்.

பிரதி செயலாளர்

பொதுநலவாயத்தின் பிரதி செயலாளர் நாயகம் மெஸக்கோ மஸிர்ம்வாம்பா ஆவார். இவர் பொட்ஸ்வானா நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமை புரிந்தவராவார்.

பிரதி செயலாளர் பொதுநலவாய செயலகத்தின் நிர்வாக விடயங்களிலும் அதன் நிறைவேற்றுப் பணிகளிலும் செயலாளருக்கு உதவுவார்.

 பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் என்றால் என்ன?

CHOGM (Commonwealth Heads of Government Meeting)

பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் (CHOGM) இரு வருடங்களுக்கொருமுறை நடைபெறுகின்றது. இதன்போது சர்வதேச, பொதுநலவாய விவகாரங்கள் கலந்துரையாடப்படுவதோடு கூட்டு வடிவிலான கொள்கைகளும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த வருடத்துக்கான பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் இலங்கையிலேயே நடைபெறுகின்றது. கடந்த 24 வருடங்களில் ஆசிய நாடொன்றில் நடாத்தப்படும் முதல் மாநாடும் இதுதான்.

ஒவ்வொரு மாநாட்டையும் பொதுநலவாய செயலகமும் அது நடாத்தப்படும் நாடும் இணைந்தே ஏற்பாடு செய்கின்றன. பொதுநலவாயத்தின் வியூகத் திசையை நெறிப்படுத்தும் வகையிலான அடிப்படைக் கொள்கை மற்றும் தீர்மானங்களை எடுக்கும் பணியை ஈராண்டுக்கு ஒரு முறை நடாத்தப்படும் இந்த மாநாடு மேற்கொள்கின்றது.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் 1949 முதல் கலந்துரையாடல்களுக்காக சந்தித்து வந்தனர். ஆனாலும், 1971 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஒரு அமர்வின்போதே பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் என்ற பெயர் வைக்கப்பட்டது.

இதற்கு முன் நடைபெற்ற மாநாடுகளில் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு, ஜனநாயகம்,காலநிலை மாற்றம், சர்வதேச வர்த்தகம், நல்லாட்சி, கடன் முகாமை, கல்வி, சூழல், பால் சமத்துவம்,சுகாதாரம், மனித உரிமைகள், தகவல் தொழினுட்பம், இளைஞர் விவகாரங்கள், பூகோள மீள் எழுச்சியினை கட்டியெழுப்புதல் ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் - 2013

CHOGM - 2013

2009 நவம்பர் 27 இல் ட்ரினிடாட் நாட்டின் தலைநகரில் இடம்பெற்ற பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் 2013 ஆம் ஆண்டைய மாநாட்டை கொழும்பில் நடத்துவதாகத் தீர்மாணிக்கப்பட்டது. 2011 ஒக்டோபர் 15 இல் அவுஸ் திரேலியாவின் பேர்த் நகரில் கூடிய தலைவர்கள் மீண்டும் கொழும்பு மாநாட்டை உறுதி செய்து கொண்டனர்.

இதன்படி 22 ஆவது பொதுநலவாய அரச தலைவர்களது மாநாடு இந்த மாதம் (நவம்பர்) 15 முதல் 17ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டோடு சேர்த்து பொதுநலவாய வர்த்தக மன்றம், பொதுநலவாய மக்கள் மன்றம், பொதுநலவாய இளைஞர் மன்றம் என இன்னும் மூன்று நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

வர்த்தக மன்றம்

பொதுநலவாய வர்த்தக மன்ற (The Commonwealth Business Forum -CBF- 2013) நிகழ்வை இலங்கை அரசும் பொதுநலவாய வர்த்தக கவுன்ஸிலும் தனியார் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்த மன்றம் நவம்பர் 12-14 வரை கொழும்பில் நடை பெறும்.

இலங்கை, பொதுநலவாய வர்த்தக மன்றத்தில் பின்வரும் நோக்கங்களை அடையாளப்படுத்தியுள்ளது.

1. நாட்டில் முதலீடு செய்வதனை ஊக்குவித்தல்

2. இலங்கையின் முதலீட்டுத் திறனை பிராந்தியத்துக்கும் உலகுக்கும் வெளிப்படுத்தல்

3. இலங்கைக்கு வெளியே உலகளவில் முதலீட்டுக்கான வழிகளை ஏற்படுத்தல்

மக்கள் மன்றம்

பொதுநலவாய மக்கள் மன்ற (The Commonwealth People`s Forum - 2013) நிகழ்வை இலங்கை அரசும் பொது நலவாய நிறுவனமும் (Commmonweath Foundation) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்வு நவம்பர்10-14 வரை ஹிக்கடுவையில் நடைபெறும்.

சிவில் சமூகம், அரசாங்கம், தனியார் துறை, இளைஞர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல்களுக்கும் தொடர்புகளுக்குமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும், சிவில் சமூக நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும்தான் இந்த மன்றத்தின் பிரதான நோக்கமாகும்.

மக்கள் மன்றத்தில் கலந்துரையாடப்படும் விடயங்கள் நவம்பர் 15 ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள சிவில் சமூக வட்ட மேசை மாநாட்டிலும் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இளைஞர் மன்றம்

பொதுநலவாய இளைஞர் மன்ற (The Commonwealth Youth Forum) நிகழ்வு நவம்பர் 10-14 வரை ஹம்பன்தோட்டையில் நடைபெற உள்ளது. இளம் தலைவர்களுக்கு மத்தியில் கருத்து, கலாசார பரிமாற்றங்களை நிகழ்த்துதல், திறன்களையும் வலையமைப்புக்களையும் உருவாக்கிக் கொள்ளுதல்,இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய சவால்களையும் சந்தர்ப்பங்களையும் அடையாளப்படுத்துதல் ஆகிய விடயங்களே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும்.

CHOGM 2013 குறித்த சர்ச்சைகள்

இந்த வருடம் நடைபெற உள்ள பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டுக்கான தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்குவதனால், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் 1991 இல் உருவாக்கப்பட்ட பொதுநலவாய அமைப்பின் ஹராரி பிரகடனத்தை இந்த அமைப்பு மீறுகின்றதா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்ற குரல்கள் சர்வதேச அரங்கில் ஒலிக்கின்றன. ஏனெனில் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் இலங்கை அரசு நிலைநாட்டத் தவறியுள்ளன என்பது அவர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்படும் வாதமாக இருக்கின்றது.

இலங்கை தனது மனித உரிமை தரத்தை முன்னேற்றவில்லை என்பதனால் தான் இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என கனடா பிரதமர் ஸ்டீபன் ஹேபர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாட்டில் பங்கேற்கக்கூடாது என தமிழ் நாட்டுத் தரப்புகள் தெரிவித்து வருகின்றன.

மாநாட்டைப் புறக்கணிப்பதற்கான அழைப்புக்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தபோதும் இதுவரை 37 நாடுகள் தாம் இந்த மாட்டில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

 http://thecommonwealth.org/

http://chogm2013.lk/

நன்றி: மீள் பார்வை

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments