64வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி

zck

(எம்.ஸீ.ஏ.ஹமீட் – முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர்) கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி தனது 64வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் இத்தருணத்தில் அதன் உருவாக்கம் பற்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன்.

இக்கல்லூரி உருவாக்கத்தில் இக்கல்லூரியின் ஸ்தாபகரான மர்ஹும் எம்.எஸ்.காரியப்பருடன் முன்னின்று உழைத்த பிரமுகர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைவதுடன் அவ்வாறான பெரியோர்களில் அனைவரும் நம்மைவிட்டும் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அவர்களது வாக்கு மூலம் எதிலும் பதியப்படாத சந்தர்ப்பத்தில் நான் மட்டும் அல்லாஹ்வின் உதவியுடன் உயிருடன் இருக்கின்றேன் என்ற வகையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உருவாக்கம் பற்றிய பிறிதொரு வெட்டுமுகத் தோற்றததை தங்களுக்கு சமர்பிக்க கடமைப்பட்டுள்ளேன்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் ஸ்தாபகர் தினமான நவம்பர் மாதம் 16 ஆம் திகதியாகி சனிக்கிழமை 64 வருடத்திற்கு முந்திய அதாவது 1949 ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இந்த கல்லூரி வளவுக்குள் ஒரு ஓலைக் கொட்டிலில் Junior English School  என்ற பெயரில் தோற்றம் பெற்ற ஒரு அரும்பு …. இன்று ஆலவிருட்சமாய் விழுதுவிட்டு பெரு வளர்ச்சி கண்டு வருகின்றது.

கல்முனை பிரதேச முஸ்லீம்களின் கல்விக்கான ஊற்று என்று சொல்வதை விட இந்த நாட்டு முஸ்லீம்களில் தேசிய சொத்து என்று குறிப்பிடுவதில் இக்கல்லூரிக்கு இரட்டை மகிழ்ச்சி. ஏனென்றால் இந்த கல்லூரியில் கல்முனைக்குடி , சாய்ந்தமருது , மாளிகைக்காடு பிரதேச மாணவர்கள் மட்டுமல்லாது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேரந்த மாணவர்களும் நாட்டின் 18 மாவட்டங்களிலிருந்து அதிகளவிலான மாணவர்களும் விடுதியில் தங்கி கல்வி பயில்கின்றார்கள். இக்கல்லூரியின் விடுதி சுமார் 50 வருடங்கள் பழைமை வாய்ந்ததொன்றாகும்.

மர்ஹும் வன்னிமை முதலியார் கேற் முதலியார் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் அவர்களே இக்கல்லூரியின் ஸ்தாபகராகும். அன்னார் கொட்டபோவே காரியப்பர் பரம்பரையைச் சேரந்த அஹமதுலெவ்வைக் காரியப்பரின் இரண்டாவது புத்திரரான டாக்டர் முஹம்மது இப்றாஹிம் காரியப்பர் அவர்களுக்கும் மட்டக்களப்பு காரியப்பர் பரம்பரைலயைச் சேர்ந்த தம்பிநயிந்தைக் காரியப்பரின் பேத்தியான லைலத்துல் கத்ரியா அவர்களுக்கும் இரண்டாவது மகனாக 1899 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 29 ஆம் திகதி பிறந்தார்.

அவர் தனது ஆரம்ப கல்வியை கல்முனை லீஸ் கல்லூரியிலும் உயர்கல்வியை கொழும்பு உவெஸ்லி கல்லூரியிலும் கற்று இலண்டன் மெற்றிகுலேசன் பரீட்சையில் விசேட சித்தியெய்து வைத்தியத்துறையின் தேர்வுப் பரீட்சைக்கு தோற்றியிருந்த வேளையில் மட்டக்களப்பு அரச அதிபராகவிருந்த ஆங்கிலேயர் திரு. சீ.பீ.பிரைன் அவர்களால்  பாணம – பொத்துவில் பற்றுக்கு வன்னிமை முதலியாராக நியமிக்கப்பட்டார்.

மேலும் நிந்தவுர் – அக்கரைப்பற்று  , சம்மாந்துறைப்பற்று … வேவெகம்பற்று … கரைவாகுப்பற்று ஆகிய பகுதிகளிலும் வன்னிமை முதலியாராக கடமை புரிந்து சுமார் 25 வருடகாலம் அரும் சேவைகளை ஆற்றினார். அவரது காலம் கல்முனையின் பொற்காலம் என வர்ணிக்கப்படுவதிலிருந்தே அவரது விசாலமான சேவைகளை நாம் ஓரளவேனும் புரிந்து கொள்ள முடிகின்றது.

இலங்கையின் தங்க மூளை படைத்த படைத்த நால்வரில் கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரும் ஒருவர் என புகழ்பெற்ற சட்டநிபுணர் பார்குமாரகுலசிங்கம் ஐயா அவர்களால் வியந்துரைக்கப்பட்ட கேற்துமலியார் காரியப்பர் அவர்களின் கல்விச் சிந்தனையின் வெளிப்பாடுதான் அன்றைய Junior English School என்ற இன்றைய கல்முனை ஸாஹிரா…

எழுத்தறிவற்று இருந்த இப்பகுதி பெரும்பாலான மக்கள் வாழ்ந்த அச்சூழலில் தனது சேவைக்காலத்தில் அரச உதவியுடன் சுமார் 20 பாடசாலைகளை பரவலாக ஆரம்பித்து வைத்து அன்னார் ஊன்றிய கல்விப்புரட்சியின் வித்து பரந்து விரிந்து இன்று அவற்றில் தேசிய பாடசாலை , மகா வித்தியாலயங்கள் , பாடசாலைகள் , ஆசிரிய கலாசாலை என்ற வகையில் வளர்ச்சி கண்டுள்ளமை கண்டுள்ளமை கண்கூடு. கையெழுத்துக் கூட வைக்கத்தெரியாமல் இருந்த இப்பகுதி முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி வழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் பெண்களு்கென தனியான பாடசாலையையும் அவர் ஆரம்பித்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக இப்பகுதி முஸ்லீம்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் தனியே ஆங்கில மொழிமூலம் பயிலக்கூடிய ஒரு பாடசாலையையும் உருவாக்கம் செய்யும் தீவிர முயற்சியிலும் இறங்கினார்.

இலவசக்கல்வியின் தந்தையான முன்னாள் கல்வியமைச்சர் கலாநிதி C.W.W.கன்னங்கரா அவர்கள் அரசாங்க சபையில் 50 தொகுதிகளுக்கும் 50 மத்திய ஆங்கில மொழிப் பாடசாலைகளையும் ( Central School )  இப்பாடசாலைகளின் போசணைப் பாடசாலைகளாக மேலும் ஆங்கில கனிஷ்ட பாடசாலைகளையும் ( Junior English School) கிராமப் புறங்களிலும் அமைப்பதற்கான திட்டத்தை கொண்டுவந்தார்.

மேற்தட்டு மட்டுமன்றி கீழ்த்தட்டு மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற அவரது எண்ணக்கருவின் பயனாக இது சாத்தியமாயிற்று.இதனைப் பயன்படுத்தி இச்சமயம் கரைவாகு வன்னிமை முதலியாராக கடமை புரிந்த கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் கல்முனையிலும் ஒரு Junior English School  அமைப்பதற்கான ஒரு பெரு முயற்சியில் இறங்கினார். அச்சந்தர்ப்பத்தில் அரசாங்க சபை பொதுத் தேர்தலுக்காக கலைக்கப்பட்டு விட்டது. இதனால் இம்முயற்சியில் முதல் தடங்கல் ஏற்பட்ட போதிலும்…

1947 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் முதல் வேலையாக இடையில் நின்று போன Junior English School ஐ அமைக்கும் முயற்சியில் முழுமூச்சுடன் இயங்கினார். இச்சமயம் கல்வியமைச்சராக பொறுப்பேற்றிருந்த மேஜர் E. A. நுகேவெல அவர்களிடம் கல்முனைக்கும் சம்மாந்துறைக்குமான இரண்டு junior English School  களை அமைத்துத் தரும்படி இதற்காக கல்முனைத் தொகுதிக்கு நேரில் விஜயம் செய்து அங்குள்ள கல்வி நிலைமைகளை பார்வையிடுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி 1948 இல் கல்வியமைச்சர் மேஜர்  E.A.நுகேவெல அவர்கள் கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் , கிழக்கு மாகாண கல்வி அதிகாரி திருவாளர் எஸ்.வி.சோம சுந்தரம் ஆகியோருடன் முதற்தடவையாக கல்முனைத் தொகுதிக்கு விஜயம் செய்திருந்தார். அவ்வேளை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலும் சம்மாந்துறையிலும் கல்வியமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் புரும் வரவேற்பளிக்கப்பட்டது. இவ்விஜயத்தின் போது அமைச்சர் அவர்கள் காணி மற்றும் தற்காலிக கட்டிட இடவசதிகளை ஏற்படுத்தி தந்தால்… தான் மேற்படி junior English School ஐ அமைத்துத் தருவதாக உறுதியளித்தார். உடனடியாக கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள்  சாய்ந்தமரு – கல்முனைக்குடி கிராமங்களுக்கு மத்தியில் இரு கிராமங்களையும் மையப்படுத்தி தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பை முற்றிலும் இலவசமாக எழுதிக் கையளித்தார். எனினும் பல மாதங்களாகியும்  junior English School  அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இதனால் 1948 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 26 ஆம் திகதியன்று இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது கேற்துமலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் தமது அமைச்சு பற்றிய விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுமுன்னர் தனது தொகுதியில்  junior English School களை அமைக்கும் முகமாக கல்வியமைச்சு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதன் பயனாக உடனடியாக குறிப்பி்ட்ட காணியில் பொது மக்களால் 60 X  20  அளவில் கிடுகளால் அடைக்கப்பட்ட ஓலைக் கொட்டிலொன்று அமைக்கப்பட்டது. இவ்வோலைக் கொட்டிலிலே 1949.11.16 ஆம் திகதி கொழும்பு வித்தியாதிபதி திரு. கே.எஸ்.அருள்நந்தி , கிழக்கு மாகாண கல்வி அதிகாரி திரு. எஸ்.ஜே.குணசேகரம் , வித்தியாதரிசி திரு. எஸ்.விஸ்வலிங்கம் மற்றும் மர்ஹும் கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் ஆகியோரின் பிரசன்னத்தில் junior English School ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் தமிழ்மொழி மூலம் 5 ஆம் தரத்தில் சித்தியடைந்த 4 மாணவர்களுடன் ஆங்கில மொழிப்பாடசாலையாக இயங்க ஆரம்பித்தது. கல்முனை கல்வி வரலாற்றில் ஒரு பொன்னபன காலம் அன்றைய தினமே உருவாகி விட்டது. அன்றை தினம் ஜனாப். எம்.ஐ.அப்துல் காதர் அவர்கள் பதில் அதிபராக கடமையேற்றார்.

இப்பாடசாலை அமைவுறுவதில் முன்னின்று உழைத்த நமது நன்றிக்குரிய பெருமக்கள் பலரை இப்போது இக்கல்லூரியில் கல்வி பயலும் மாணவர்களுக்கும் ஏனையோருக்கும் தெரிந்திரிக்க வாய்ப்பில்லை.அவர்கள் இன்று இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டார்கள்.எனினும் அவர்களது அன்றைய சேவையால் தான் இன்று நீங்கள் புகழ்புத்த தேசிய ரீதியில் பிரபல்யம் பெற்ற இக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்.அந்த பெரியார்களின் புனித சேவைக்கு எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி பாலிப்பானாக …ஆமீன்..! .மேலும் அவர்களின் நாமங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது மாத்திரமல்ல நம் அனைவரினாலும் நன்றியுடன் நினைவு கூரத்தக்கதுமாகும்.

குறிப்பாக இக்கல்லூரி ஸ்தாபகர் கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பருடன் அப்போதய கிராமச் சங்கத் தலைவராகவிருந்த மர்ஹும் எம்.வை.ஹமீது உடையார் , மர்ஹும்களான எம்.ஏ.கபுர் மரைக்காயர் , பீ.எம்.மீராசாஹிப் பயில்வான் , இராசப்போடியார் எனும் எம்.ஐ.அஹமதுலெவ்வை , ஓ.எம்.அலியார் , ஐ.அலியார் , எம்.எம்.ஆதம்பாவா சேர்மன் , யு.எம்.இப்றாஹிம்லெவ்வை, இப்றாலெவ்வை மரைக்கார் , ஐ.எம்.ஏ.ஐயுப் அதிபர் , நைனா முஹம்மது எனும் ராசா ஓடாவியார் , பீ.எம்.மக்புல் ஆலிம் , முஹம்மது காசிம் கணக்கப்பிள்ளை , ஏ.எம்.சரீப் விதானை , முஹம்மது கனி வைத்தியர் , கோ. அஹமதுலெவ்வை மரைக்காயர் , எம்.எச்.எம்.ஹனீபா வட்டான , ஆகியோர் இப்பாடசாலை அமைவதில் அதிக கரிசனையும் சிரத்தையும் கொண்டு இயங்கிய பெருமக்கள் ஆவர்.

4 மாணவர்களுடன் இயங்க ஆரம்பித்த இக்கல்லூரி நிதந்தர அதிபர் ஒருவர் இன்றி பதின்மூன்றரை மாதங்கள் இயங்கியது. ஜனாப். எம்.ஐ.அப்துல் காதர் அதிபர் அல்லது ஜனாப் எம்.எம்.இப்றாஹிம் அதிபர் அல்லது திரு. பொன்னப்பா அதிபர் ஆகியோரால் காலத்திற்கு காலம் அதிபருக்குரிய கடமைகளட ஆற்றப்பட்டு வந்தன. இதனை கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் கவனத்திற்கு கொண்டு வந்த போது அவரது நடவடிக்கையினால் திஹாரியிலிருந்து ஜனாப் எம்.ஏ.மீராலெவ்வை அவர்கள் அங்கிருந்து மாற்றம் பெற்று 1951.01.01 அன்று அதிபராக பொறுப்பேற்றார். இதனால் இக்கல்லூரிக்கு முதலாவது நிதந்தர அதிபர் நியமிக்கப்பட்டார். மாணவர் தொகையும் ஆசிரியர் தொகையும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

1953 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு அமைவாக ஆங்கில மொழிப்பாடசாலையிலிருந்து தமிழ்மொழிப்பாடசாலையாக மாற்றம் பெற்றது.

1949 இல் ஆங்கில மொழி பாடசாலையாக ஆரம்பித்து .. ஸீனிய ஸ்கூலாக … மகா வித்தியாலயமாக .. மத்திய மகா வித்தியாலயமாக …. இன்று 1 AB Super Grade தேசிய பாடசாலையாக வளர்ச்சியுற்றுள்ளது. இன்று 2800 மாணவர்களுடனும் 150 ஆசிரியர்களுடனும் 20 இற்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்களுடனும் பிரகாசித்துக் கொண்டிருப்பது எமக்கெல்லாம் பெருமையினை தேடித்தருகின்றது.தற்போது 2013  இல் தனது 64 வது அகவையை எய்தியிருக்கும் கல்முஐன ஸாஹிர இன்று அறிவார்ந்த சமூதாயத்திற்கு எத்தனையோ தலைசிறந்த மாணவர்களை உருவாக்கியிருக்கின்றது. கலாநிதிகள் , பல்கலைக்கழக பீடாதிபதிகள் , கல்வியல் கல்லூரி பீடாதிபதிகள் , நிபுணத்துவ வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் ,  உயர் சிவில் நிர்வாக உத்தியோஸ்தர்கள் , பிரதியமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாணசபை உறுப்பினர்கள் , மாநகரசபை உறுப்பினர்கள் , பிரதேசசபை உறுப்பினர்கள் , வலய கல்விப் பணிப்பாளர்கள் , கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் , பட்டதாரிகள் , அரச திணைக்கள அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் , சுங்க திணைக்கள அதிகாரிகள் , அதிபர்கள் , ஆசிரியர்கள் , விளையாட்டு வீரர்கள் , ஊடகவியலாளர்கள் , வர்த்தக பிரமுகர்கள் , தொழிலதிபர்கள் , விளையாட்டு அதிகாரிகள் , கணிணித்துறை விற்பன்னர்கள் , போன்றோர் ஸாஹிரா தாயின் அரவணைப்பிலிருந்து இன்று உலகமெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாளைய உலகத்தின் தலைமைத்துவத்தை பொறுப்பெடுக்கக் காத்திருக்கும் நீங்களும் ஏன் உங்கள் பிள்ளைகளும் , அவர்களின் பிள்ளைகளும் பரம்பரை பரம்பரையாக பயன்பெற வைக்கும் உயர்கல்விச் செல்வத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்த 64 எவயது ஸாஹிரா என்ற கல்வித் தாயை இந்த உலகில் நீங்கள் எங்கிருந்து போதிலும் மறக்க மாட்டீர்கள் என்பது திண்ணம்.

அம்பாறை மாவட்டத்தில் காலஞ்சென்ற முன்னாள் கல்வியமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு முதல் முறையாக நடாத்தப்பட்ட  தேசியக்கல்விப் பொதுத்தராத சான்றிதழ் பரீட்சையில் ( NCGE) பரீட்சையில் 1977 ஆம் ஆண்டு 10 பாடங்களிலும் ஏ சித்தி , 1979 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சையில் 4 பாடங்களிலும் ஏ சித்தி , 1982 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் 10 பாடங்களிலும் டீ சித்தி என்று சாதனைபடைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட பயணம் 2009 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு 17 மாணவர்களை பொறியியல் துறைக்கு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியதுடன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் பொறியியல் துறையில் முதல் நிலை மாணவர்களையும் தம்வசம் வைத்துக் கொண்டுள்ளது.

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் கல்முனை ஸாஹிராக்கல்லூரி என்ற பெயரில் உப தபால் நிலையமொன்றும் கல்லூரி வளாகத்தினுள் இயங்கி வருகின்றது. இதனை மர்ஹும் எம்.ஸி.அஹமட் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சராகவிருந்த செல்லையா குமாரசூரியரினால் திறந்த வைக்கப்பட்டது.

இக்கல்லூரிக்கு முன்னாள் அதிபர்களும் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் மகாசபை உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.