நெல்சன் மண்டேலாவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!

images

மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலிருந்தும் அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , நெல்சன் மண்டேலா, பிறர் விடுதலைக்காக, தனது சுதந்திரத்தைத் தியாகம் செய்தவர் என்று கூறியிருக்கிறார்.

நெல்சன் மண்டேலா காட்டிய உதாரணம் இல்லாமல் இருந்தால், தன்னால் தனது வாழ்க்கையையேகூட கற்பனை செய்ய முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நெல்சன் மண்டேலா ஒரு தலைவராகவும், தனிப்பட்ட மனிதராகவும், மிகவும் பிரத்யேகமான ஒருவர் என்று இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கூறினார்.

மேலும் மன்மோஹன் சிங் கூறுகையில், மண்டேலா உலகின் மனசாட்சியாகத் திகழ்ந்தவர் என்றும்,அவரது தென்னாப்ரிக்க மக்களை அவர் தடைகளைக் கடக்க தலைமை தாங்கி நடத்திய பின்னரும், உலகெங்கும் ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராகப் போராடி வரும் மக்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் திகழ்ந்தார் என்று கூறினார்.

பிரிவினையால் சிதறிக்கிடக்கும் உலகில், அவர் நல்லிணக்கத்துக்கும் , சமாதானத்துக்கும் உழைப்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார் என்றும் அவரைப் போல ஒருவரை இனி இன்னும் நீண்ட காலத்துக்குப் பார்க்க முடியாது என்றும் கூறினார் மன்மோஹன் சிங்.

நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனாதன் உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஒரு உத்வேகத்தை அளிப்பவராக விளங்கினார் என்று கூறினார்.

நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பரும் , நோபல் சமாதானப் பரிசு பெற்றவருமான பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு, கேப் டவுனில், நெல்சன் மண்டேலாவுக்காக பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

தென்னாப்ரிக்க நிறவெறி அரசின் கடைசி அதிபரான எப்.டபுள்யூ.டி கிளார்க் ( மண்டேலாவை 30 ஆண்டு சிறைவாசத்திலிருந்து விடுதலை செய்தவர்) தென்னாப்ரிக்கர்கள் நெல்சன் மண்டேலாவை ஒரு பெரிய ஒற்றுமைப்படுத்தியவராகவே நினைவு கூர்வார்கள் என்றார்.

மண்டேலாவை சந்தித்தது, தனது வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த ஒரு பெரிய கௌரவம் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறினார்.

சீனா மானுட குலத்தின் முன்னேற்றத்துக்கு மண்டேலாவின் பங்களிப்பை ஒருபோதும் மறக்காது என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.

நெல்சன் மண்டேலாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ  ஆழ்ந்த அனுதாபம்!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மன்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கவலை தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவிற்கு அனுதாப செய்தியொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய தென்னாபிரிக்காவின் தந்தையான நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்து, தென்னாபிரிக்க குடியரவு மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவிப்பதாக பொதுநலவாய நாடுகளின் தற்போதைய தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க மக்களை மாத்திரமன்றி உலகெங்கும் உள்ள பல கோடிக்கணக்கானோரை சோகத்தில் ஆழ்த்தியபடி வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 15-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரச மரியாதையுடன் நடத்தப்படவுள்ளதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா அறிவித்துள்ளார்.

அவரது மறைவை முன்னிட்டு, தென்னாபிரிக்காவில் எல்லாக் கொடிகளும் 10 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.

துக்க அனுஷ்டிப்புக் காலம் தென்னாபிரிக்காவில் தொடங்கிய நிலையில், அந்நாட்டின் அனைத்துப் பொது, அரசு கட்டிடங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தென்னாபிரிக்கத் தூதரகங்கள் அனைத்திலும், அஞ்சலிக் குறிப்புகளை மக்களும் பிரமுகர்களும் எழுத உதவும் வகையில், அஞ்சலிப் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.

ஜோஹனஸ்பர்கின் புறநகர்ப்பகுதியில் உள்ள எப்.என்.பி அரங்கத்தில், தேசிய துக்கப் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று நடத்தப்படவிருக்கிறது.

அதன் பின்னர், பிரிட்டோரியாவில் மூன்று நாட்கள் நெல்சன் மண்டேலாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

தொடர்ந்து எதிர்வரும் 15ம் திகதி நெல்சன் மண்டேலாவின் உடல் கிழக்கு கேப் பகுதியில் அவர் வளர்ந்த குனு கிராமத்தில் அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படும்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.