முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க புதுவழிகள் அவசியம் – சேகு இஸ்ஸதீன்

sq
கேள்வி:- நீண்ட நாள் மெளனத்தைக் கலைய விட்டு முஸ்லிம் அரசியல் பற்றி நீங்கள் விடுத்த அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. இந்தத் திடீர்த் திருப்பத்துக்கு என்ன காரணம்?
 
பதில்: திடீர்த் திருப்பம் என்று பெரிதுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை.  நிருபர் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு முஸ்லிம் அரசியல் போக்கைப் பற்றி அங்கலாய்த்து அரசு – தமிழர் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பற்றிய எனது கருத்தைக் கேட்டார்.
நிருபர் கேட்டார் என்பதனால், முஸ்லிம் அரசியலுக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தைக் கெளரவப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு – தமிழர் கூட்டமைப்பு பேச்சு வார்த்தையில் முஸ்லிம்களும் ஒரு தரப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்ற எனது அபிப்பிராயத்தை அவரிடம் தெரிவிக்க வேண்டி நேரிட்டது. அதற்கு ஓர் அறிக்கையின் அந்தஸ்தைக் கொடுத்து முக்கியத்துவப்படுத்தியது முஸ்லிம் அரசியலுக்கு ஆற்றிவரும் தேறிய பங்களிப்பில் உள்ளதாகும். ஆயினும், அதன் மூலம் நான் எதுவித அரசியல் சுயலாபத்தையும் குறி வைக்கவில்லை என்பது சத்தியவாக்கு.
 
 கேள்வி: அரசு – தமிழர் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களும் ஒரு தனித்தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கருதுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது? வடக்கு, கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளெல்லாம் இப்போது அரசாங்கத்துடனேயே கூட்டுச் சேர்ந்திருக்கின்றன தானே. அதனால் தமிழர் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சமுகத்தின் நலவுரிமைகள் தொடர்பான கரிசனையையும் கருத்தில் கொண்டு தான் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பலாமல்லவா? அதனால் அரசு – தமிழர் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் சமூகம் ஒரு தனித்தரப்பாகக் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் எழமாட்டாது அல்லவா?
 
பதில்:- அவ்வாறான ஒரு நம்பிக்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அனைத்து முஸ்லிம் பெரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கும் இருக்குமானால், ஒரு தனித்தரப்பாக முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காதுதான்.
இருந்த போதும், அந்த நம்பிக்கையை முஸ்லிம் சமுதத்துக்கு வெளிக்காட்டும் வகையில் பேச்சுவர்த்தைகளில் கலந்து கொள்ளும் அரசு தரப்பினரில் ஒரு முஸ்லிம் அங்கத்தவரைக் கூட அரசு சேர்த்துக் கொள்ளாமல் விட்டது ஏன்?
தமிழர் கூட்டமைப்புத் தரப்பிலும் கூட ஒரு முஸ்லிம் உறுப்பினரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் தமிழர் கூட்டமைப்போடு முஸ்லிம் பெரும்பான்மை கட்சிகளின் தலைமைகள் எதுவித கூட்டமையும் வைத்துக் கொள்ளவில்லை. முஸ்லிம்களின் நலவுரிமைகளும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளுள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று எந்த முஸ்லிம் தலைமையும் உடன்பாட்டுக்கு வந்ததுமில்லை. அதனால் தமிழர் தரப்புக்கு முஸ்லிம் பிரதிநிதியைச் சேர்த்துக் கொள்ளும் தேவைப்பாடு எதுவும் இல்லை. வடக்கு, கிழக்குப் பிராந்திய முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமான எதுவித நலவுரிமைகளையும் செய்யும் நோக்கம் பிற்கால தமிழர் தலைமைகளிடம் இருக்கவில்லை என்பது முஸ்லிம்கள் அறிந்த விடயம். வடக்கு, கிழக்கு முஸ்லிம்களை ஒரு தனித்த பிரத்தியேகமான இனமாகவோ, சமூகமாகவோ அவர்கள் ஏற்றக்கொண்டதே கிடையாது. வடக்கிலிருந்து அத்தனை முஸ்லிம்களையும் ஒரே நாளில் அகதிகளாக்கிய பின்னரும் கூட தமிழர் தரப்பு முஸ்லிம் சமுகத்தை ஒரு தனியான சமுகமாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. மட்டக்களப்பு கல்லடிக்கு அப்பால் முஸ்லிம் அதிகார அலகு அமைக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய அமரர் தந்தை செல்வாவுக்குப்பின் அப்படி ஒரு தமிழ்த் தலைமையோ, சிந்தனையோ அறியப்படவில்லை.இவை போன்ற காரணங்களால் தமிழர் தரப்பு முஸ்லிம் சமுக நலவுரி மைகளை அங்கீகரிக்கமாட்டாது என்பது தெளிவானதாகும். ஆனால் அரச தரப்பு ஒரு முஸ்லிம் பிரதி நிதியைச் சேர்த்துக் கொள்ளாமல் விடுவது சீரணிக்கச் சிரமமான சமன்பாடு இல்லையா?
 
கேள்வி: இந்தப் பேச்சு வார்த்தைகளில் அரசு தரப்பு ஒரு முஸ்லிம் பிரதிநிதியைச் சேர்த்துக் கொள்ளாமல் விட்டாலும் கூட அரசே முன்னின்று முஸ்லிம் களின் அபிலாஷைகளை உள்வாங்கிக் கொண்டு செயற்படுமானால் முஸ்லிம் தரப்பு அவசிய மற்றதுதானே? மேலும் அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும். தெரிவுக்குழுவில் அரசாங்கத்தின் அங்கங்களாக தம்மை நம்பிக் கொண்டிருக்கும். வடக்கு, கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கப்படும் தானே? அவ்வாறு நடைபெறும் போது அந்த முஸ்லிம் பிரதிநிதிகள் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷை களை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்புகள் வராமலா போகும்?
 
பதில்: வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம், உரிமைகள், அதிகாரப் பரவலாக்க அலகு போன்ற விடயங்களில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பெரும்பான்மை அரசியல் கட்சிகளிடம் இது கால வரை ஏதேனும் ஒரு பொதுவான இணக்கப்பாடு இருந்தது கிடையாது. இக்கட்சிகள் முஸ்லிம்களின் நலவுரிமைகள், அபிலாஷைகள் பற்றி எப்போதாயினும் கூடிப் பேசியதும் கிடையாது. இதற்குப் பின்னராயினும் அவை கூடிப்பேசி ஒரு பொதுவான இணக்கப்பாட்டைக் காண்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று சொல்லவும் முடியாது.
இவ்வாறு முஸ்லிம் சமுகத்தின் மொத்த நலன் பற்றிய ஒரு சூன்யமான நிலைமையில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவுக்குழுவில் எதனைச் சாதிக்க முடியும். 
ஆளை ஆள் எதிர்த்து முஸ்லிம் சமுகத்தைப் பலவீனப்படுத்துவதைத் தவிர? அதைவிட முக்கியமானது தெரிவுக்குழுவில் தாம் கலந்து கொள்ள வேண்டுமானால் வட-கிழக்கு இணைப்பு, காணி நிலங்கள் மீதான ஆதிக்கம், சட்டம், ஒழுங்கு தொடர்பான வரையறைகள் போன்ற வற்றில் இணக்கம் காணப்பட வேண்டுமென்ற தமிழர் தரப்பு விடுத்திருக்கின்ற கோரிக்கை தட்டிக்கழிக்கக் கூடியதா? தமிழர் தரப்பு தெரிவுக் குழுவில் கலந்து கொள்ளாது விடும் நிலைமை ஏற்பட்டால் தெரிவுக்குழுவை வைத்துக் கொண்டு எதனை சாதிக்க முடியும்?
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் தமிழர்களோ, முஸ்லிம்களோ எந்த நன்மையையும் அடைய முடியாமற் தானே போகும்? அரசு தரப்பின் கடும் போக்காளர்கள் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும் அதைத்தானே?
தமிழர்கள் தெரிவிக்குழுவில் கலந்து கொள்ளமல் விட்டாலும் பரவாயில்லை. வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளை மாத்திரமாவது நாம் நிறைவேற்றுவோம் என்று அரசு முன் வருமா? அவ்வாறு முன்வரும் என்று பேச்சள வில் ஏற்றக்கொண்டாலும், முஸ்லிம்களின் அபிலாஷைகள் இன்னின்னவை தான் என்று எந்த முஸ்லிம் கட்சியாவது அரசாங்கத்துக்கு அறிவித்திருக்கிறதா? அது எந்த முஸ்லிம் கட்சி? அக்கட்சி என்னென்ன ஆலோசனை களை முன்வைத்திருக்கிறது? யாருக்காவது தெரியுமா? 
13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தான் பேச்சுவார்த்தைக்கு அடித்தளமாக இருக்கப் போகிறது என்றால் முஸ்லிம் சமுகம் எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது.
தமிழர் கூட்டமைப்பை தட்டிக் கேட்டு நெறிப்படுத்த தமிழர் சிவில் சமுகம் என்ற அமைப்பு இருப்பதைப் போல முஸ்லிம் கட்சிகளை வழி நடத்த முஸ்லிம் சிவில் சமுகம் என்று ஒரு அமைப்பை முஸ்லிம் புத்திப் போராளிகள் அமைத்துச் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
 
கேள்வி: இன்றைய அரசியல் சூழ்நிலையில் வட-கிழக்கு இணைப்பு சாத்தியப்படுமா? எவ் வாறாயினும் அப்படி இணைக்கப்படுவமானால் முஸ்லிம்களின் அபிலாஷையான தென்கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட வேண்டுமென்பதில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து உறுதியாய் செயற்படும். சாத்தியம் இருக்கிறதா?
 
பதில்: வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதை சிங்களக் கடும் போக்காளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்ற தமிழர் தரப்புக் கோரிக்கையை வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டு மாய் இருந்தால் இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம் பெரும்பான்மை தென்-கிழக்கு மாகாண சபை உருவாக்கத்துக்கு தமிழர் தரப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டி வரும். அவ்வாறு செய்ய தமிழர் தரப்பு சம்மதிக்கமாட்டாது. அதனால் வட-கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம்களும் ஆதரிக்க மாட்டார்கள். இதனால் வெளிநாட்டு அழுத்தங்களில் மட்டுமே தமிழர் தரப்பு முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டிவரும். அந்த நம்பிக்கை எதிர்பார்க்கும் பலனைத் தரும் என்று சொல்வதற்கில்லை.
இவை போன்ற காரணங்களால் வட-கிழக்கு இணைப்பு சாத்தியப்பட இடமில்லை. அதனால் தென்-கிழக்கு மாகாண கோரிக்கையை முஸ்லிம்கள் தட்டி எழுப்பி தூக்கி நிறுத்த முடியாது.
அதனால் முஸ்லிம் கட்சிகள் தாம் பிரதிநிதித் துவப்படுத்தும் முஸ்லிம்களின் அரசியல் உரிமை களை பாதுகாக்க புது வழிகள் பற்றி சிந்தனை செலுத்த வேண்டி நிர்ப்பந்திக்கப்படுவர்.
 
கேள்வி:- புது வழிகள் எவ்வாறான அடிப்படைகளை கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிaர்கள்?
 
பதில்:- என்னைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்க அலகை மாவட்ட மட்டத்துக்கு சுருக்கிக் கொள்ள வேண்டும் என்பதே.
தமிழம், இணைந்த வட-கிழக்கு மாகாணம் என்பவையெல்லாம் வலுவிழந்த சொற்றொடர்களாகி விட்டன. அப்படித்தான் தென்-கிழக்கு மாகாணக் கோரிக்கையும்.
ஆயுதப் போராட்டங்களும், பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் கோலோச்சிய காலத்துக்கு கற்பனைகளுடனும், கனவுகளுடனும் ஆகாயக் கோட்டைகளைத் தேடி ஆலாய்ப் பறப்பது தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமுகத்தின் பங்கப்பட்ட கெளரவத்தில் பயணிக்கும் முயற்சியாகவே இருக்கும். ஆடியும் கறக்க முடியாத பாடியும் கறக்க முடியாத அரசை யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு அடிமைத் தனத்துக்கு ஆட்படாது அனுசரித்துச் செல்வதைத் தவிர ஆதாயமான ஒரு வழி அண்மையில் இருப்பதாகத் தெரியவில்லை.
தனியான கிழக்கு மாகாண சபையும், தனியான வடக்கு மாகாண சபையும் கூட முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தையும் பிரத்தியேக அரசியல் அடையாளத்தையும் உருக்குலைப்பதிலேயே முடியும். தமிழர் தரப்பு என்ன கொள்கையையும் வைத்துக் கொண்டிருக்கலாம். அது அவர்களது தனிப்பட்ட விடயம். இந்த நாட்டின் மொத்த நலனுக்காவும், முஸ்லிம்களின் கூட்டு நன்மைக் காகவும் தான் வட-கிழக்கு மாகாண இணைப்பை நாம் வலியுறுத்துகிறோம் என்று தமிழர் தரப்பு நாக்கூசாது சொல்லாது. அதிகார அலகு மாகாண மட்டத்திலாயினும் இருப்பது இந்த நாட்டின் மொத்த நன்மைக்காகவும், வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் கூட்டு நன்மைக்காகவும் என்றும் தமிழர் தரப்பு நாக்கூசாது சொல்லாது.
ஏனெனில் தமிழர் தரப்பின் அப்போதைய ஆயுதப் போராட்டமும், தற்போதைய அரசியல் போராட்டமும் தமிழர் சமுகத்தின் தனிப்பட்ட நன்மைக்காக மாத்திரம் தான். தேசப்பற்றோ, சகோதர சமுகப் பற்றோ தமிழர் தரப்புப் போராட்டப் பாதையில் இருந்ததற்கு எதுவித சான்றும் கிடையாது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டாடி, தமிழர்களில் சகோதர பாசம் பொழிந்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழ் மாநிலம் என்று மார்தட்டித் திரிந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை இன்று கண்ணீர் நனைத்த கசப்புணர்வோடு தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
மேற்சொன்ன காரணங்கள், நியாயங்கள் போன்றவற்றால் அதிகார பரவலாக்கம் மாவட்ட மட்டத்து மாற்றப்பட வேண்டும். மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட சபைகள் 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட ஏற்பாடுகளோடு உருவாக்கப்பட வேண்டும்.
தேவைக்கேற்ப சில மாவட்டங்கள் இன அடிப்படைக்கு வசதியளித்து மாற்றப்பட வேண்டும். உதாரணத்துக்கு அம்பாறை மாவட்டத்தில் அறுபது (60%) நூற்று வீதமாக இருக்கும் தமிழ் மொழிச் சமுகங்களுக்கென தென்கிழக்கு மாவட்டம் என்று ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டச் சபை முதல்வருக்கும் மத்திய அரசில் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத மாவட்ட அமைச்சர் பதவி வழங்கப் பட்டு மாவட்ட விடயங்களும் அபிவிருத்தி களும் உடனுக்குடன் கவனிக்கப்படும் விதத்தில் சட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
மாவட்ட சபைக்கென்று தனிப்பட்ட தேர்தல்கள் இல்லாமல் மாவட்டத்துக்கடங்கி உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களின் உப தவிசாளர், எதிர்க் கட்சித் தலைவர்களை உள்ளடக்கியதாக மாவட்ட சபைகள் உருவாக் கப்பட வேண்டும். அவர்களால் தெரிவு செய்யப்படும் தவிசாளர் மாவட்ட அமைச்சராகும் வாய்ப்பைப் பெறுவார்.
 
கேள்வி:- இவ்வாறு அலகின அளவைக் குறைப்பதற்கு தமிழர் தரப்பு இணங்குமா?
 
பதில்:- ஆற அமர சிந்தித்துப் பார்த்தால் அதிகாரப் பரலாக்கத்தை இவ்வாறு விரிவுபடுத்துவது அநுபவ ரீதியாக அமோக வரவேற்பை பெற வாய்ப்புண்டு. தமிழர்களுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு என்று குறைந்த பட்சம் ஆறு மாவட்ட சபைகளும், ஆறு மாவட்ட அமைச்சர்களும், அமைச்சரவையில் தமது மாவட்டத்தின் மக்களின் பிரச்சினைகளை விளக்கும் வாய்ப்பும் அமைச்சரவையின் அநுரசணையைப் பெறும் சந்தர்ப்பமும் கிடைக்கும். வெறுமனே அலகுக் காகப் போராடிக் கொண்டிருப்பது இன்றைய யதார்த்தத்தில் மக்களை வருத்தத்தில் நீடிக்கும் முயற்சியிலேயே முடியும்.
பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டதற்குப் பின்னர் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே ஏற்பட்டுள்ள நிம்மதியும், அவர்கள் மத்தியில் உருவாகி வரும் அன்பும், புரிந்துணர்வும் தட்டிக் கழிக்கக் கூடிய விஷயமல்ல.
எல்லாரும் தமக்குத் தேவையான எல்லாவற்றையும் எப்போதும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எங்குமில்லை.
எல்லாருமே ஒருமித்து இந்த நாட்டை எல்லாரினதும் நாடாக்கும் முயற்சியில் இனிதே எல்லைப் பேதங்களை களைந்து உழைக்க முன்வரும் போது அந்த நல்லெண்ணத்துக்கு நற்கூலி கிடைப்பது நிச்சயம்.
Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>