ரிஸானா நபீக் ஒர் மீள் வாசிப்பு

images

(பௌஸ்தீன் பமீஸ்)

கடந்த வருடம் எமது செவிகளை எட்டிய மனதினை அதிர்ச்சி சோகத்தினால் நிசப்தப்படுத்திய செய்திதான் ரிஸானா நபீக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமையாகும்.

மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக் 2005ஆம் ஆண்டு நான்காம் திகதி சவுதிக்கு பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டு அதே மாதத்தில் 22ஆம் திகதி அவரது பராமரிப்பில் விடப்பட்ட சிசு மரணமானது. அதைத் தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்ட ரிஸானா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டாள்.

இதன் முக்கிய அங்கமாக 2007ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 16ஆம் திகதி ரிஸானா நபீக்கின் கொலைக்குற்றத்திற்கு தீர்ப்பாக சவுதி நீதிமன்றம் மரணதண்டனையை அளித்தது. இந்நிமிடம் முதல் ரிஸானா நபீக் தூக்கு மேடை ஏறும் வரை அவரைக் காப்பாற்றும் முயற்சி பல்வேறு வடிவிலும் தொடர்ந்த வண்ணமே இருந்தன. இதன் முக்கிய கட்டங்களாக ஜனாதிபதி சவுதி மன்னருக்கு எழுதிய கடிதம், இலங்கை அமைச்சர்கள் அதிகாரிகள் சவுதிக்கு விஜயம் செய்து பேசியமை (கோத்திரத் தலைவர் உட்பட குழந்தையின் தாய் தந்தைகளுடன் பேசியமை), அமைச்சர் ஹக்கீம் சவுதி தூதுவரினை சந்தித்தமை, டாக்டர் கிபாயா இப்திகாரின் தொடர் விடா முயற்சிகள் என மூதூர் குடிசையின் சாதாரண மகனிலிருந்து நாட்டின் பலம்மிக்க அதிகாரியான ஜனாதிபதி வரை முயற்சிகள் இடம்பெற்றன. என்றாலும், அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிவுற்றன.

ஆகவே, நாம் இப்போது எமது ரிஸானாவை பறிகொடுத்து விட்டோம். அதனது துயரத்தால் நோயில் ஆழ்ந்த தந்தையையும் பறிகொடுத்து விட்டோம். இனியும் இதுபற்றி ஆளுக்கு ஆள் மாறி எமது வழமையான செயற்பாடான குற்றச்சாட்டுதல், சச்சரவுகள், வாக்குவாதங்களில் எதுவிதப் பயனுமில்லை. இதற்கு மாறாக நாம் இன்று எமது ரிஸானாவை பறிகொடுத்தது போன்று நாளை ஒரு ரிஸானாவையோ, பாத்திமாவையோ, ஏன் ராஜகுமாரியையோ, மல்லிகாவையோ மனிதப்பிறவியாகப் பிறந்த எந்த ஒரு உயிருக்கும் இதுபோன்ற ஒன்று ஏற்படாமல் இருக்க இந்நிமிடம் முதலே முயற்சியில் இறங்க வேண்டும். இது சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனுடைய கடமையாகும். மேலும் இந்நிலைக்கு ரிஸானாவை இட்டுச்சென்ற சமூகக்காரணிகளை இனங்கண்டு அதிலிருந்து மீளுவதற்கான முயற்சிகளை, தீர்வுகளைக் காணவேண்டியதும் எம்அனைவர் மீதும் பாரிய பொறுப்பும் பணியுமாகும் என்றால் மறுப்பதற்கில்லை இதன் அடிப்படையில் பின்வரும் காரணிகள் ரிஸானாவின் விடயத்தில் முக்கியத்துவம் பெறுவதுடன் எமக்குப் பாடமாகவும் முன்னிற்கின்றன.இந்த வகையில் அவளது முதலாவது வருட நினைவு தருணத்தில் பின்வருவன இன்றியமையாதது.

• பணக்காரர்கள் ஏழைகள் மீது தமது கவனத்தைச் செலுத்துதல்

உண்மையிலேயே இறைவன் உங்களது செல்வங்களிலிருந்து ஸதகாவை கொடுங்கள் என இறைமறையினூடாக எம்மை ஏவுகின்றான் மேலும் சமூகத்தின் வறுமையைப் போக்கவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தவும் ஸகாத்தைக் கடமையாக்கியிருப்பதுடன் ஸதகாவை கொடுக்குமாறும் ஏவியுள்ளான். ஆகவே ரிஸானாவும் அவர் வாழ்ந்த மூதுர் பிரதேச மண்ணினைச் சார்ந்த மக்களது பொருளாதார சமூகச் சூழ்நிலையானது மிகவும் அடிமட்டத்திலே காணப்பட்டது. வறுமைக்கோட்டின் வலையமாகவும் இதற்குத் தீர்வாக பணிப்பெண்கள் தொழிலுக்கு வெளிநாடு செல்பவர்களாகவும் பெண்களின் நிலை இருந்தது. இதற்குத் தீர்வாக ஏனைய பணிப்பெண்களைப் போன்றே ரிஸானாவும் குடிசை வீட்டை கல்வீடாகவும், உடன்பிறப்புக்களின் கனவுகளை நனவாக்கவுமே வெளிநாடு செல்ல ஆயத்தமானாள்.

ஆகவே வறுமையின் கோரப்பிடியிலிருந்து ஓரளவாவது தப்பி நல்ல வாழ்வுக்கு திரும்வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் இருந்ததே தவிர பணக்காரராகி நாட்டை ஆளவேண்டும் என்பதல்ல. எனவே எமது ரிஸானாவின் இந்நிலைக்கு இன்று சமூகத்தில் கொடிகட்டிப்பறக்கும் பணக்காரர் எனத் தன்னை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அனைவர் மீதும் நிச்சயமாக கேள்வி கணக்கு உள்ளது. இறைவன் கூறிய இஸ்லாத்தின் வறுமை ஒழிப்புத் திட்டத்தினை இவர்கள் மறந்து விட்டார்கள். அதுமாட்டுமன்றி சமூகத்திலுள்ள பள்ளிவாசல்கள், பொது அமைப்புக்கள், சமூக சேவை நலன்புரி நிறுவனங்களில் பொறுப்பு வகிக்கும் ஒவ்வருர் மீதும் நிச்சயமாக கேள்விகணக்கு உண்டு. எனவே ரிஸானாவின் நிலையிலிருந்து ஏனையோரை காப்பாற்றுவதற்காக உடனடியாக வறுமை ஒழிப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இது ஸகாத், ஸதகா, அரசாங்கசார், அரசாங்க சாரா என்பனவற்றினூடாக இடம்பெறலாம்.

• பெண்களினை வெளிநாட்டுக்கு அனுப்பும்போது இஸ்லாமிய ஷரீஅத்தின் வரையறையை கடைபிடித்தல்

இன்று எமது ரிஸானா பறிபோனதற்கு இதுவும் ஒரு முக்கிய தாக்கத்தினை செலுத்துகிறது. அதாவது எமது இஸ்லாமிய ஷரீஅத்தின் படி ஒரு பெண் தனியாக பிரயாணம் செய்யக் கூடாது. ஆனால் இங்கோ ஒரு பெண் தனியான நீண்ட பிரயாணமும் நீண்ட தரிப்பும் தேவையாகிவிடுகின்றது. எனவே இயன்றவரை பெண்கள் தங்களுக்கு ஆகுமான ஒருவருடன் இணைந்து வெளியில் பணி செய்வதே சாலச் சிறந்ததும், பொருத்தமானதும், பாதுகாப்பானதும் ஷரீஅத்தின் நிலையுமாகும்.

• தொழில் தகைமையற்றவர்களை வெளிநாட்டுக்கு பணியாளர்களாக அனுப்பாதிருத்தல்

இதுவும் பிரச்சினைகள் தலைதூக்குவதற்கு முக்கிய காரணமாகும். அதாவது தகைமையற்றவர்கள் வெளிநாட்டுக்கு செல்வதால் சென்றுமுடிந்து அங்கே பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. பணத்தின் மோகத்தின் காரணமாக வெளிநாட்டு முகவர்கள் பணியாளர்களுக்குரிய தகைமைகளை தூக்கியெறிந்துவிட்டு தனது வயிற்றையும் பணப்பையையும் நிரப்பிக்கொள்வதற்காக இவ்விடயத்தை மேற்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி வெளிச்செல்பவர்களும் தங்களைத் தகைமையாக்குவதற்காக மூவைமுடுக்கெல்லாம் அலைந்து தங்களைத் தகைமையாக்கிக் கொள்கின்றனர். ஆகவே, நாட்டின் சட்டதிட்டங்களை உறுக்கமாகக் கடைபிடிப்பதோடு தகைமையானவர்களை மாத்திரம் அனுப்புவதில் வெளிநாட்டு முகவர்கள் கரிசனை காட்டுவதோடு இதுசார்ந்த விடயத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூடியகவனமும் இறுக்கமான சட்டத்தையும் நெறிப்படுத்த வேண்டும்.

• இளைஞர் யுவதிகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

இன்று நாட்டில் இலஞ்ச ஊழல் இடம்பெறும் மிகப்பெரும் துறையாக வெளிநாட்டு முகவர் தொழில் காணப்படுகிறது. எப்படியாவது பணத்தினைப் பெற்றிட வேண்டும் என்ற முனைப்போடு சட்டம், மனிதாபிமானம், ஷரீஅத் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு போலி ஆவணங்களினூடாகவும், கசப்பான வார்த்தைகளினூடாகவும் வெளிநாட்டு முகவர்கள் தங்களிடம் வருவோரை மடக்கிவிடுகின்றனர். அதுமட்டுமன்றி இன்று அதிகமான போலி வெளிநாட்டு முகவர்கள் குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பணத்தை சூறையாடிவிட்டு மறைந்துகொள்வதுடன் ஏனையோரை ஏமாற்றும் தொழிலில் ஈடுபடுகின்றனர். எனவே இவ்வாறான போலியானவர்களை இனங்கண்டு அழிக்காதவரை வெளிநாட்டுப் பிரச்சினை தலைதூக்கிக் கொண்டே இருக்கும். எனவே இவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட, செயல் நடவடிக்கைகளை மும்முரமாக ஈடுபடுத்ததுவதன் மூலமே ஏனையோரின் எதிர்காலத்தையும் பாதுகாக்க முடியும்.

• எமது தேசத்தில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல்

ரிஸானா போன்ற எமது உறவுகளுக்கு நியாயமான சம்பளத்துடன் கூடிய தகுதியான தொழிலைப் பெற்றுக் கொடுக்கவும் அதுசார்ந்த பயிற்சிகளை அனைத்து அரசு அரசுசாரா அமைப்புக்கள் நடைமுறைப் படுத்துவதில் முன்வரவேண்டும். ஏனெனில் கைதியாக தரித்திருந்த தாவாத்மி சிறைச்சாலையில் கூட இறுதி வரை சிறிய சிறிய வேலைகளை செய்யக்கூடிய ஒரு பெண்ணாகவே ரிஸானா இருந்து வந்துள்ளார். ஆகவே இவ்வாறு வீரமிக்க எமது தேசத்தின் மானுடர்களைக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற அவர்களது பால் சார்ந்த பொருத்தமான தொழிலைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் சமூகத்தில் உருவெடுத்துள்ள மத்திய கிழக்கு பயணத்திற்கு இயன்ற அளவு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

• வேண்டும் டாக்டர் கிபாயா இப்திகார் போன்ற பெண்மணிகள்

முஃமினானா ஒரு பெண் இன்னொரு முஃமினான பெண்ணுக்கு தோழி என்ற வகையில் இறைத்தூதர் கால சாஹாபிப் பெண்மணிகளினது வாழ்க்கை நெறியை கடைபிடிப்போர் இன்று மிகவும் அறிது ஆனால் டாக்டர் கிபாயா இப்திகார் இயன்றளவு தன்னை ஈடுபடுத்தி தனது சகோதரியை மீட்க முடியுமான முயற்சிகளை முன்னெடுத்ததை காணக்கூடியதாக இருந்தது. அதுமட்டுமன்றி ரிஸானாவின் குடும்பத்தினையும் ஆறுதல் படுத்தக்கூடிய ஒருவராகவும் இருந்துள்ளாள். எனவே நவீனம் என்ற போர்வைக்குள் இன்றைய இவ்வாறான பெண்மணிகள் மகிவுமே குறைவு. இன்று டாக்டர் கிபாயா இப்திகார் போன்ற சமூகத்தின் காலச்சக்கரத்தினை உணர்ந்து சுழலக்கூடிய ஏராளமான சக்கரங்கள் என்றென்றும் எமக்குத் தேவையாக உள்ளது.

• எமது ஒரே ஆயுதம்

எம்மால் முடியுமான அனைத்து முயற்சிகளும் கைகூடாத நிலையில் எமது உறவுக்கும் அவரது மறுமை வாழ்வுக்குமான எமது ஒரே ஆயுதமான துஆவைப் பயன்படுத்தி தினசரி எமது தொழுகையிலும் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கக் கூடியவர்களாக நாம் அனைவரும் இருக்கவேண்டும். ஏனெனில் நாம் அனைவரும் இதற்குப் பொறுப்புதாரிகளாக உள்ளோம் என்பதை காலம் பல கடந்தாலும் ஒரு கனமேனும் மறந்து விடலாகாது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.