கல்முனையை சேர்ந்த சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் அப்துல் கபூர் நெதர்லாந்தில் காலமானார்!

Gafoor-02

கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட பௌதீகவியல் பேராசிரியர் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் தனது 65ஆவது வயதில் நெதலர்லாந்தின் கிரோனிகன் நகரில் இன்று புதன்கிழமை அதிகாலையில் காலமானார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் துறையில் பட்டம்பெற்ற இவர் இலங்கை புள்ளிவிபரவியல் நிறுவனத்தில் புள்ளிவிபரவியல் துறையில் பட்டப்பின் படிப்புக்கான பட்டத்தைப் பெற்றுக்கொண்டதுன் இத்தாலியிலுள்ள கோட்பாட்டு பௌதீகவியலுக்கான சர்வதேச மையத்திலும் பிரான்சிலுள்ள தூய மற்றும் பிரயோக கணிதவியலுக்கான சர்வதேச மையத்திலும் உயர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் குறுகிய காலம் விரிவுரையாளாராக பணிபுரிந்த இவர் நெதர்லாந்து கிரோனிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக கடமையாற்றியதுடன் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக உலகின் பல நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் பட்டயக்கணக்கு புள்ளிவிபரவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளராக மற்றும் பேராசிரியராக கடமையாற்றியுள்ளார்.

மேலும், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன் அதுதொடர்பாக நடைபெற்ற பல மகாநாடுகளிலும் கலந்துகொண்டுள்ளதோடு, இஸ்லாமிய வங்கி முறை தொடர்பில் ஆங்கில மொழியில் ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் கபூர் தமிழ்மொழியிலும் சில நூல்களை எழுதியுள்ளார். நெதலர்லாந்தின் கிரோனிகன் தகவல் தொழில்நுட்ப போரத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ள பேராசிரியர் கபூரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று புதன்கிழமை மாலையில் நெதலர்லாந்தின் கிரோனிகன் நகரில் இடம்பெறவுள்ளது.

 

பேராசிரியரின் ஒரு வரலாற்றுக் குறிப்பு…

கல்முனைக் குடி -06ஆம் குறிச்சியின் 116, ஹனீபா வீதியை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் கபூா் 1946.07.16ல் அஹமது லெவ்வை ஆலிம் ஆயிஸா தம்பதியினருக்கு சிரேஷ்ட புதல்வராக கல்முனையில் பிறந்து, கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் தமது ஆரம்பக்கல்வியை கற்றார். இப்பாடசாலையிலேயே தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து JSC பரீட்சையிலும் சித்தியடைந்தார்.

அடுத்த வருடத்தில் SSC Arts பரீட்சை எழுதுவதற்கு அவா் அனுமதி கேட்டபோது அதற்கு பாடசாலை நிருவாகம் முதலில் மறுத்து
பின் அனுமதியை வழங்கியதன் விளைவாக அவர் SSC Arts பரீட்சையில் முதன்மை மாணவராக சித்தியெய்தி வந்தாரமூலை மகா வித்தியாலயத்தில் விடுதியில் தங்கி 9 ஆம் தரத்தை கற்றார்.

பின்னர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் SSC Science பயில்வதற்காக அனுமதியைப்பெற்று அங்கு ஒரு வருடம் கல்வி கற்றா். இக்காலத்தில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் 6 மாதம் விஞ்ஞான பீட செயன் முறைக்காக தற்காலிகமாக சேர்க்கப்பட்டா் . பின்னா் SSC Science சித்தியடைந்து தனது HSC உயர் கல்வியைக் ( தற்போதுள்ள A/Lலுக்கு சமமான )  கற்பதற்காக கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

பேராசிரியா் அப்துல் கபூா் தமது பாடசாலைக் கல்வியை முடித்ததோடு மட்டக்களப்பு இலங்கை வங்கியில் இலிகிதராக மூன்று வருடங்கள் கடமையாற்றி, பின்னர் கல்முனை ஸாஹிரா கல்லூரியில் கணித பாட ஆசிரியராகவும் சிறிது காலம் கடமையாற்றினார்.

பின்னா் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியலும், கணிதமும் கற்று பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் புள்ளிவிபரவியலாளர் நிறுவனத்தில் புள்ளிவிபரவியலில் பட்டப்பின் டிப்ளோமா பட்டம் பெற்ற இவர், இத்தாலியிலுள்ள கோட்பாட்டு பெளதீகவியலுக்கான சா்வதேச மையத்திலும், பிரான்சிலுள்ள தூய மற்றும் பிரயோக கணிதவியலுக்கான சா்வதேச மையத்திலும் உயர் கல்வியை பயின்றார்.

சிறிது காலம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், பின்னர் கொழும்பு மார்க்கா நிறுவனத்தில் புள்ளிவிபர, கணினித் துறைத் தலைவராகவும் பணிபுரிந்த இவர் நெதர்லாந்திலுள்ள  க்றோனிங்கன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பேராசிரியர் கபூா் கிழக்காசியாவிலுள்ள இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ், மலைதீவு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் தலைநகர்களில் காணப்பட்ட நூலகங்களை கணனிமயப்படுத்தியதோடு ஐக்கிய நாடுகள் அமையத்தில் புள்ளிவிபரவியல் தொடார்பாக விஷேட உரையாற்றிய இவர் கல்முனை ECDO நூலகத்தின் இஸ்தாபகர்களில் ஒருவராவார்.

இவர் நெதர்லாந்து – கல்முனை நட்புறவு அமைப்பின் தலைவராகவும் கல்வி கலாசார மேம்பாட்டு ஸ்த்தாபனத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.

இறுதியாக நெதலாந்தின் பிரஜா உரிமை பெற்று, க்றோனிங்கன் நகரில் வாழ்ந்த பேராசிரியர் கபூா் பட்டய புள்ளி விபரவியலாளரும், பட்டய தகவல்  தொழில்நுட்பவியலாளரும் ஆவார். தற்போது முஸ்லிம்கள் அதிகம் அக்கறை காட்டும் மாற்று வங்கி முறை மாதிரி ஒன்றை அபிவிருத்தி செய்வதில் தன் நேரத்தின் பெரும் பகுதியை செலவிட்டார். இது தொடர்பாக ஆங்கிலத்தில் ஐந்து நூல்களையும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to கல்முனையை சேர்ந்த சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் அப்துல் கபூர் நெதர்லாந்தில் காலமானார்!

  1. Vote -1 Vote +1Rifan Ibrahim
    says:

    we miss great man allahu akbar, we will pray for him, thanks for voknews for this news and gafoor sir history

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>