இஸ்லாமிய அடிப்படையிலான ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

h

அரசுடன் இருந்தபோதும் தனித்துவத்தை இழக்க மாட்டோம். முஸ்லிம் முதலமைச்சர் வேண்டுமெனக் கோருவதில் என்ன தவறு. இஸ்லாமிய அடிப்படையிலான ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

பிரதேசவாதம் என்பது வெறுக்கத்தக்க ஓர் அரசியல் சித்தாந்தம்.கிழக்கு மாகாண சபை தூரநோக்குடன் பணியாற்ற வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் புதிய பரிமாணம் பெறும். என்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார் .

கேள்வி : மு. கா.வில் உயர் பதவிகளில் அமர்ந்து கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்ட நீங்கள் அதைவிட்டு விலகி ‘துஆ’ எனும் தனிக்கட்சியை ஆரம்பித்தீர்கள். அதற்கான காரணம் எதுவெனக் கூறுவீர்களா?

பதில் : மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள், உரிமைகளைப் பெற்று தலை நிமிர்ந்து வாழ்வதற்காகவே தனித்துவமான கட்சியொன்றை ஆரம்பித்தார். அதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இக்கட்சி தோற்றம் பெற்றதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அஷ்ரப் அவர்களின் அற்புதமான ஆளுமையினால் கவரப்பட்ட நான் அக்கட்சியில் இணைந்தேன். கட்சியின் வளர்ச்சியிலே அஷ்ரப் அவர்கள் காட்டிய தீவிர கவனமும் அவரது இனப் பற்றும் என்னை அவரோடு நெருங்க வைத்தது. அதனால் கட்சியின் வளர்ச்சிக்காக நான் தீவிரமாக உழைத்தேன். பதவிகளை எதிர்பார்த்து நான் கட்சி வளர்ச்சியில் ஈடுபடவில்லை. எனது ஆற்றல், அறிவு, திறமையை கட்சிக்கு அர்ப்பணித்தமை காரணமாக பதவிகள் கிடைத்தன. கட்சியின் வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளராக பணிபுரிய சந்தர்ப்பம் கிடைத்தது. இந்நாட்டு முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு, உரிமை, அபிலாஷைகள் கட்டிக்காக்கப்பட வேண்டியவை என்று அஷ்ரப் அடிக்கடி கூறுவார். அந்த இலட்சியத்தினுடனேயே நானும் பணிபுரிந்தேன்.

துரதிஷ்டவசமாக எமது தலைவர் எம்மைவிட்டுப் பிரிந்தார். தற்போதைய தலைவர் ஹக்கீம் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஹக்கீம் எனது நெருங்கிய நண்பர். அவருக்கு பக்க பலமாக இருந்து அவரைப் பலப்படுத்தி விடுவேனோ என்ற பயத்திலும் என்மீதான காழ்ப்புணர்விலும் திட்டமிட்டு சிலர் என் னைக் கட்சியிலிருந்து வெளியேற்றினர்.

மு.காவை விட்டு நான் விலகிய போதும் அக்கட்சி மீது எனக்குள்ள பற்றும் பாசமும் மதிப்பும் என்றும் குறைந்ததில்லை. அதனால் தான் எந்தப் பேரினவாதக் கட்சியுடனும் சங்கமிக்கவில்லை. நான் யாருக்கும் சோரம் போகவுமில்லை. முஸ்லிம்கள் பேரினவாதக் கட்சிகளுடன் இணைவதை அஷ்ரப் விரும்பியவரல்லர். அதனால் ‘துஆ’ ளிஸிதி எனும் தனிக்கட்சியை ஆரம்பித்து அரசியல் நடத்தினேன். துஆ வெளிப்பார்வைக்கு சிறிய கட்சி போல தோற்றமளித்த போதும் அதன் மூலம் பல சாதனைகளை நாம் நிறைவேற்ற முடிந்தது. மு. காவிலிருந்து பிரிந்த பல கட்சிகள் இன்று அரசியல் செய்கின்றன. முஸ்லிம்களுக்கென பல கட்சிகள் தோன்றிய போதும் மு. காவின் செல்வாக்கை எந்தக் கட்சியாலும் குறைக்க முடியவில்லை. அஷ்ரப் அவர்கள் இட்ட அசைக்க முடியாத அடித்தளத்திலே கட்டப்பட்ட அரசியல் கோட்டையாக மு. கா. விளங்குகின்றது. அதன் செல்வாக்கு மக்கள் மத்தியில் மென்மேலும் உயர்ந்து வருகின்றது. எனவே தான் எமக்கிடையேயான கருத்து வேற்றுமைகள் பேசித் தீர்க்கப்பட்ட காரணத்தால் நான் மு. கா.வில் இணைந்துள்ளேன். இன்றைய சூழ்நிலையிலே மு. காவின் அரசில் பணிகள் முஸ்லிம்களின் நலவுரிமைக்குத் தேவையாகவுள்ளது.

கேள்வி : மு. கா. வின் தற்போதைய தலைமைத்துவம் பற்றி என்ன நினைக்கின்aர்கள்?

பதில்: மு. காவின் தற்போதைய தலைமைத்துவத்தைப் பற்றி விபரிக்க முன்னர் முஸ்லிம்களின் கடந்த கால அரசில் நிலைமையை நினைவுகூர வேண்டியுள்ளது. அதாவது மு. காவின் உருவாக்கத்துக்கு முற்பட்ட முஸ்லிம் அரசில் என்றும் அதன் உருவாக்கத்துக்குப் பின்னரான அரசியல் போக்கு என்றும் பார்ப்போமாயின் மு. காவின் உருவாக்கத்துக்கு முற்பட்ட முஸ்லிம் தலைவர்கள் சமுதாயத்தின் மீதுள்ள பற்றும் அக்கறையும் காரணமாக பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்தே முஸ்லிம்களுக்கான தேவைகளைக் கவனித்தனர். பல நல்ல காரியங்களையும் மேற்கொண்டனர். அவர்களுடைய சேவையை நாம் மறப்பதற்கில்லை. இத்தகைய சூழ்நிலையில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான இனம் அவர்களின் உரிமைகள், அபிலாஷைகள் பற்றி சிந்திக்க வேண்டுமென்ற ஒரு கடமைப்பாட்டுணர்ச்சி பெரும்பான்மை சமூகத்துக்கு என்றுமே இருந்ததில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காகத் தான் மர்ஹ¥ம் அஷ்ரப் மு. கா.வை உருவாக்கினார். முஸ்லிம்கள் இந்நாட்டின் தனித்துவமான ஒரு தனிப்பட்ட சக்தி என்ற உண்மையை மு.கா. வெளிப்படுத்தியது. அவர்களது கூட்டுப் பலமும் ஒற்றுமையும் நாட்டுப் பலத்தின் ஒரு பகுதி என்பதை மு. கா. நிரூபித்தது. இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ்க் கொண்டுவர அஷ்ரப் அவர்கள் பெரும்பணிபுரிந்தார். ஒரே கொள்கையைப் பின்பற்றும், ஒரே பணியை முன்னெடுக்கும் முஸ்லிம்களின் கூட்டுக் குடும்பமாக மு. கா. விளங்க வேண்டுமென்பது அஷ்ரப்பின் கனவாக இருந்தது. மு. கா.வை விமர்சித்த சக்திகளையும் தமது அறிவால், ஆற்றலால், சாணக்கியத்தால் வெற்றிகொண்டு மு. கா.வின் பக்கம் இழுத்தெடுத்தார். ஏனைய சமூகங்களின் சக்திபோல முஸ்லிம்களும் ஓர் அரசியல் சக்தி என்பதை மு.கா.வின் வளர்ச்சி நிரூபித்துக்காட்டியது.

துரதிஷ்டவசமாக அவர் மறைந்தார். அவரது இடத்தை நிரப்ப தலைமைப் பதவி பெற்ற ஹக்கீம் அவர்கள் மர்ஹ¥ம் அஷ்ரப் விட்டுச் சென்ற இலட்சியப்பாதையில், இலக்கை அடையும் வகையிலே பணியாற்றி வருகின்றமை சமுதாயம் திருப்திப்படக்கூடிய விடயமாகும்.

மு. கா. ஓர் இனவாதக் கட்சியேயல்ல என்பதை ஏனைய சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் வகையில் தலைவர் ஹக்கீமின் பணிகள் அமைந்துள்ளன. ஹக்கீம் கடும் போக்கற்றவர். நிதானமாகச் செயற்படுபவர். எந்தப் பிரச்சினைக்கும் முகம் கொடுத்து காரண காரியங்களை ஆராய்ந்து சரியான முடிவெடுப்பதில் திறமை பெற்றவர் என்பதை அவரது தலைமைத்துவப் பணி காட்டி நிற்கின்றது. அவருக்கு எதிரான சதிமுயற்சிகளையெல்லாம் சாணக்கியமாக முறியடித்தார். சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகளோடு நெருங்கிய தொடர்பும் நல்லெண்ணமும் கொண்டு செயற்படுகின்றார். பிற மத ஆன்மீகத் தலைவர்களோடும் சிநேக பூர்வமாகவும், அவர்களை மதித்தும் அரசியல் செய்கிறார். மு. கா. ஓர் இனவாதக் கட்சியல்ல என்பதை அஷ்ரப் அவர்கள் நிரூபித்தது போல தலைவர் ஹக்கீம் அவர்கள் தனது செயல்மூலம் யதார்த்தமாக்கி வருகின்றார்.

முஸ்லிம்களின் நலன் கருதி வன்னி சென்று புலிகளுடன் கூட பேச்சு நடத்தினார். தற்போது கூட்டமைப்பு தலைவர்களோடும் நெருக்கமாக நடந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டு வருகின்றார்.

முஸ்லிம் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வன்முறையில் இறங்கக் கூடாது என்ற விஷயத்தில் அஷ்ரப் அவர்கள் விழிப்பாயிருந்தது போல ஹக்கீம் அவர்களும் விழிப்பாகச் செயற்படுகின்றார். பதவிக்கு ஆசைப்பட்டு கொள்கையில் மாறாதவராகவும் எந்த நிலைப்பாட்டிலும் சோரம் போகாத தலைவராகவும் அவர் அரசியல் செய்கிறார். நாட்டின் முக்கிய அமைச்சுப் பதவியை வகித்தபோதும் கூட பதவியை பெரிதாக மதிக்காது சமூகத்துக்காக அவர் கண்டனக்குரல் எழுப்பி முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்.

கேள்வி : கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு. காவின் நிலைப்பாடு என்ன?

பதில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒரு பங்காளிக் கட்சியாக இருந்தபோதும் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுத்து அரசியல் நடத்தப் போவதில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொணட ஒரு மாகாணம். முஸ்லிம் வாக்காளர்களோ, முஸ்லிம் காங்கிரஸோ, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமென நினைப்பதில் எந்தத் தவறுமில்லை. அது எமது உரிமை. நாங்கள் யாரையும் திருப்திப்படுத்துவதற்காக அரசியல் நடத்தவில்லை. வேறு கட்சிகள் இந்த விடயத்தை விடடுக் கொடுத்தாலும் மு. கா. விட்டுக்கொடுக்காது. தேர்தல் தொடர்பாக அரசுடன் பேசி பொருத்தமான தீர்மானத்தை மு. கா. மேற்கொள்ளும்.

கேள்வி : கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் போட்டியிடும் எண்ணமுண்டா?

பதில் : ஆம். நிச்சயமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமான வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.

கேள்வி : கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிர்வாகம் தொடர்பாக உங்கள் எருத்து என்ன?

பதில் : கிடைத்த சந்தர்ப்பத்தை மாகாண சபை நழுவ விட்டு விட்டது. ஜனாதிபதியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அரச முக்கியஸ்தர்கள் கிழக்கை அபிவிருத்தி செய்ய மேற்கொண்ட முயற்சிகளை நாமறிவோம்.

ஆனால் கிழக்கு மாகாண சபை அதனைப் பயன்படுத்த தவறிவிட்டது என்பதே என் கருத்து. அரசாங்கம், சர்வதேசம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இன்னோரன்ன அமைப்புகளின் பல்வேறு உதவிகள் கிடைத்த போதும் நிறுவன ரீதியாக இந்த அபிவிருத் திகளை முறையாக இவர்கள் முன்னெடுக்க வில்லை. அவர்கள் தூரநோக்குடன் செயற்படவில்லை. ஜனாதிபதியினது துரித வழிகாட்டலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கிழக்கை வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற மேற்கொண்டுவரும் முயற்சிகள் ஏராளம். தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளை நாமறி வோம்.

கேள்வி : முஸ்லிம் காங்கிரஸை மீளக் கட்டியெழுப்ப திட்டங்கள் வகுக்கப்படுவதாக கூறியிருக்கின்aர்களே.

பதில் : இக்கட்சி நீண்ட காலமாகப் புனரமைக்கப்படவில்லை. கடந்த கால சூழலே இதற்குக் காரணம். முஸ்லிம்களின் அரசியல் பாசறையாக இருக்கும் இந்தக் கட்சியிலிருந்து அரசியல் கற்றுக் கொண்ட பலர் பிரிந்து சென்றுள்ளனர். கட்சியின் புதிய பரிமாணம் அரசியல் முக்கியஸ்தர்களை மீள இணைத்துக்கொள்ள வழி வகுக்குமென நம்புகின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸ் வெறுமனே அரசியல் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக, அதற்காகப் போராடும் அமைப்பாகவோ மட்டும் தொடர்ந்தும் இருக்கவே முடியாது. முஸ்லிம்களின் ஒட்டுமொத்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைத் திட்டங்களைக் கொண்ட கட்சியாக மிளிர நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி, சுகாதாரம், தொழில்துறை, சுயதொழில் முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு ஒட்டுமொத்த பொருளாதார எழுச்சியை உருவாக்கும் கட்சியாக மாற வேண்டிய தேவையுள்ளது.

அத்துடன் இஸ்லாமிய அடிப்படையிலான ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கப் பாடுபட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அரபு மொழி பேசும் ஒரு சூழலை ஏற்படுத்தும் வகையில் மத்ரஸாக்களிலும் ஏனைய கலாபீடங்களிலும் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான வேலைத்திட்டங்களை நாம் வகுப்போம்.

கேள்வி : மு.காவில் பிரதேசவாதம் தலைதூக்கியுள்ளதாகப் பேசப்படுகின்றதே?

பதில் : பிரதேசவாதம் என்பது வெறுக்கத்தக்க ஓர் அரசியல் சித்தாந்தம் பிரதேசவாதம் பேசும் ஒருவரது கருத்துகள் அந்தப் பிரதேசத்திலுள்ள சிலரது காதுகளுக்கு எடுபடலாம். ஆனால் நிதானமானவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிரதேசவாதம் பேசும் ஒருவர் ஒரு சமூகவாதியாகவோ தேசிய வாதியாகவோ வளர்ச்சி பெறும் தகைமையை இழக்கிறார். பிரதேச வாதம் நிலைத்ததாக சரித்திரம் இல்லை. அது வெறும் குறுகிய வாதமே.

மு. காவைப் பொறுத்தவரை அது தனித்தன்மை வாய்ந்த தேசிய கட்சி. அக்கட்சிக்குள் பிரதேச வாதத்துக்கு இடமில்லை. கட்சிகள் பிரதேசவாதத்துக்கு இடமளிக்குமானால் அந்தப் பிரதேசத்துடன் அதன் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படும். மு. கா. தேசியக் கட்சி என்பதால் அதில் பிரதேசவாதத்துக்கு இடமில்லை. இன்றைய நிலையில் மு. கா. வை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்றுபட வேண்டிய காலகட்டமிது. எனவே துஆவைப் பின்பற்றி முஸ்லிம் கட்சிகளுள்ளே வேற்றுமைக்குள் ஒற்றுமை ஏற்படுமானால் அந்தக் கூட்டுப் பலம் நமது சமூகத்தை வாழ வழிவகுக்கும்.

தினகரன்  சுஐப் எம். காசிம்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>