முதலமைச்சர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைவிடவும் எந்தத் தரத்தை உடையவர் என்பதே அதிமுக்கியமானதாகும்!

12121
(பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்டவர். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை ஸ்தாபித்ததில் பிரதான பங்கிளை வகித்த இவர் அதன் சூறாசபை உறுப்பினராகவும், காத்தான்குடி நகரசபையின் எதிர்கட்சித்தலைவராகவும் பதவிவகிக்கின்றார்.

தனியார் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் தலைவராகவும் பணிபுரியும் இவர், 2002 ஆம் ஆண்டு சமாதான கால போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் அரசதரப்பு உறுப்பினராகக் கடமையாற்றி மூதூர் மற்றும் வாழைச்சேனை வன்முறைகளின்போது முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கத்தவறியமையைக் கண்டித்து தனது பதவியை இராஜினாமாச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

மக்களுக்கான மாகாண சபை எப்படி அமைய வேண்டும்…?

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் விரைவாக நடாத்தப்படவிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற அரசாங்க அறிவிப்புக்கள் வெளியாகியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தரப்புக்களும் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர். தமது கட்சிசார் அல்லது பதவிசார் நோக்கங்களை நிவர்த்தி செய்யும் வகையில் எப்படி இந்தத் தேர்தல்களத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர்கள் ஆர்வங்காட்டத் தொடங்கியுள்ளதோடு பல வகையான வியூகங்களும் வகுக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது.

எனினும் இத்தேர்தல் தொடர்பான மிகஅடிப்படை விடயமொன்று மாத்திரம் எல்லோராலும் மறக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது..

அதாவது, கால்நூற்றாண்டுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட இந்த மாகாணசபை எனும் நிருவாகக் கட்டமைப்பு என்ன நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டது? கடந்தகாலங்களில் அந்நோக்கங்களில் ஏதேனும் நிறைவேறியிருக்கிறதா?

அதிகாரப்பகிர்வின் மூலமாகத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைமக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்வதற்காகவும் அதன் மூலமாக அவர்கள் தமது நாளாந்த விவகாரங்களை சுதந்திரமாக நிர்வகிப்பதற்கும் அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த பல்வேறு பிரச்சினைகளுக்குமான அரசியல் தீர்வாகவுமே மாகாணசபை எனும் கட்டமைப்பு உருவாகியது.

ஆனாலும் அர்த்தமுள்ள ஒரு அதிகாரப்பகிர்வாகவோ அல்லது வடகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைவாகவோ அல்லது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தரும் ஒன்றாகவோ இந்த மாகாணசபை நிர்வாகம் இதுவரை அமையவில்லை எனப்பொதுவாகக் கூறலாம்.

சிறுபான்மைமக்களுக்கு அதிகாரப்பகிர்வினைக் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்ட மாகாணக் கட்டமைப்பு தனது அடிப்படை நோக்கங்களிலிருந்து தடம் புரண்டு புதிய புதிய அரசியல்வாதிகளை வளர்த்தெடுக்கும் ஒரு இடமாகவும் நாட்டின் பொதுநிதியிலிருந்து பெரும் பகுதியைப் பிரயோசனமின்றிச் செலவு செய்கின்ற நிருவாக கட்டமைப்பாகவுமே மாறியிருக்கின்றது. இப்போது காணப்படும் கிழக்கு மாகாணசபையை எடுத்துக்கொண்டால் மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை, ஏனைய வளப்பங்கீட்டுப் பிரச்சினை மற்றும் நிதி, நிருவாக விடயங்கள் என்பவற்றுக்கு அதனால் ஏதேனும் தீர்வுகளைக் காணமுடிந்திருக்கிறதா? அல்லது சிறுபான்மை மக்களுக்காகப் பேசவேண்டிய விடயங்களில் அதனால் சுதந்திரமாகக் குரல்கொடுக்க முடிந்திருக்கின்றதா? எனும் கேள்விகள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

சுருக்கமாக சொல்வதானால்… கிழக்கு மாகாணசபை நிர்வாகம் என்ற ஒன்று இல்லாத நிலையிலும் அங்கு நடந்திருக்கக்கூடிய விடயங்களைத்தான் ஏறத்தாள தற்போதைய கிழக்கு மாகாணசபையும் செய்துவருகின்றது என்றேகூறலாம்.

கிழக்கு மாகாணத்தில் முக்கியபிரச்சினையாக காணிப்பிரச்சினை காணப்படுகிறது. இங்குள்ள காணிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி மத்திய அரசினால் அபகரிக்கப்பட்டுவருவதாகவும், அரச உதவியுடனான சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொடர்ச்சியாக முறைப்பாடும் செய்யப்பட்டு வருகிறது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் முடக்கப்பட்டுள்ளார்கள். பயங்கரவாதக்காலத்தின்போது இடம்பெயர்ந்த மக்களை முறையான வசதிகளுடன் மீள்குடியமர்த்த முடியாதநிலை தொடர்கிறது. மாகாணசபை சுதந்திரமாக தமது கடமையைச் செய்வதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆளுனர்; தடையாக இருக்கின்றார் என முதலமைச்சரும், மாகாண அமைச்சர்களும் அறிக்கை விடுகிறார்கள். அப்படியானால், மக்களுக்காக சுதந்திரமாக இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட மாகாணசபையின் சுதந்திரத்திற்கு என்ன நடந்தது..?

தனது ஆட்சிக்காலம் முடிவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கின்ற நிலையில் அதனைக் கலைக்கவேணடுமென கிழக்கு மாகாண மக்களும் கோரவில்லை. அம்மாகாணசபையின் பிரதிநிதிகளும் விரும்பவில்லை. ஆனாலும் தனது சொந்த அரசியல் தேவைகளுக்காக அதனை அவசரமாகக் கலைக்க அரசாங்கம் விரும்புகின்றது. இந்த விடயத்தில்கூட தமது கருத்துக்களை அரசாங்கத்திடம் சுதந்திரமாகச் சொல்ல முடியாத நிலையிலேயே கிழக்கு மாகாணசபை இருந்திருக்கிறது என்பதுவே யதார்த்தமாகும்.

தமது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக சபையைக் கலைப்பதற்கு அனுமதிக்க முடியாது எனக்கூறி நீதிமன்றம் சென்ற வடமத்திய மாகாணசபைக்கிருந்த சுயாதிக்கம்கூட கிழக்கு மாகாணசபைக்கு இருக்கவில்லை இங்கு தெளிவாகத் தெரிகின்றது.

இப்படியான அர்த்தமில்லாத அதிகாரப்பகிர்வினையும், தமது சட்டபூர்வமான கடமைகளை செய்யக்கூடிய சுயாதீனமும் திராணியும் இல்லாத, மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத மாகாணசபை ஒன்றினைத்தானா மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்? அதைத்தான் நாம் எதிர்வரும் தேர்தலிலும் நாம் உருவாக்கப்போகின்றோமா?

அல்லது 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரப்பகிர்வினை அர்த்தபூர்வமானதாகச் செயற்படுத்தும், சுயாதீனமாக இயங்கும் வினைத்திறனும் வலிமையும் மிக்கதான மாகாணசபையை உருவாக்கப்போகிறோமா?

எனவேதான், இனிவரும் காலங்களிலாவது பதிமூன்றாவது திருத்தசட்டத்தின் மூலமாக பகிரப்பட்டுள்ள அதிகாரங்களுக்கேற்ப சுதந்திரமாக இயங்கி, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக்கூடிய ஒரு மாகாணசபையாக கிழக்கு மாகாணசபையினை நாம் உருவாக்க வேண்டும். அதற்கேற்ற தகுதியும், நேர்மையும், ஆளுமையும், சுயமரியாதையும் கொண்டவர்களை இச்சபைக்கான தமது பிரதிநிதிகளாக எதிர்வரும் தேர்தலில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கவனமாக தெரிவு செய்வதன் மூலமே இவ்வாறானதொரு மக்கள் சபையினை உருவாக்குவது சாத்தியப்படும். இதுவே எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தல் பற்றிய எமது பார்வையாகும்.

முஸ்லிம் முதலமைச்சர் கோசம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முஸ்லிம் முதலமைச்சரா அல்லது தமிழ் முதலமைச்சரா என்கின்ற கோசங்களும் வாதங்களும் மாகாணசபையின் நோக்கங்களைப் புரிந்துகொள்ளாத அல்லது தற்போதைய மாகாணசபையின் அடைவுகள் பற்றி அக்கறை கொள்ளாததின் பிரதிபலிப்பென்றே கருதுகிறேன்.

முதலமைச்சர் என்கின்ற பொறுப்புமிக்க பதவியோடு தமிழ் அல்லது முஸ்லிம் என்கின்ற இனரீதியான அடையாளங்களை முக்கியத்துவப்படுத்துவதும் அதனை ஒரு பிரம்மாண்டமான அசியல் கோசமாக மாற்றுவதும் கவலையளிக்கின்றது. சிறுபான்மை மக்களின் அரசியல் தமது அடிப்படை இலட்சியங்களை மறந்து கடந்தகாலங்களில் ஒரு இனவாத அரசியலாக மாறிவிட்டிருக்கும் ஒரு துரதிஸ்டவசமான நிலையின் மற்றுமொருபிரதிபலிப்பு என்றே தமிழ் முதலமைச்சர் அல்லது முஸ்லிம் முதலமைச்சர் கோசத்தினைப்பார்க்க வேண்டியிருக்கிறது.

அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்குகின்ற. அரசாங்கத்தின் விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி எதனையும் செய்ய முடியாத கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு முஸ்லிமாக இருந்தாலென்ன? தமிழராக இருந்தாலென்ன? அதன்மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.

எனவே முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற கோசம் தேர்தலில் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குகளை அள்ளியெடுப்பதற்காக விரிக்கப்படும் ஒரு வியூகவலை என்றே சொல்லலாம். இது சமூக அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கடந்தகாலங்களிலும் செய்யப்பட்டதுபோல ஒரு வெளிப்பூச்சிப் பெறுமானத்தை மாத்திரமே கொண்ட ஒரு தேர்தல் கோசமே.

முஸ்லிம் தனித்துவ அரசியலின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களும் முஸ்லிம் முதலமைச்சர் எனும் இலட்சியத்தைக் கொண்டிருந்தார் என இதற்கு நியாயம் சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகத்திற்கான சுயநிர்ணயமும் அதற்கான அதிகாரப்பகிர்வு அலகும் அதற்குத் தலைமை தாங்கக்கூடிய சுதந்திரமும் ஆளுமையும் கொண்ட ஒரு முதலமைச்சரையுமே அஸ்ரப் அவர்கள் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லாமல் அரசாங்கத்தின் காலடியில் கட்டுப்பட்டுக்கிடந்து அவர்களின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தும் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை உருவாக்க அவர் முயன்றிருக்க முடியாது.

அஸ்ரப் அவர்களின் இலட்சியங்களை விளக்கிக்கூறும் நீண்ட உரைகளிலிருந்து வசதியாகப் பிரித்தெடுக்கப்பட்ட முஸ்லிம் முதலமைச்சர் போன்ற வார்த்தைகளும் அவரது புகைப்படங்களுமே அவர் தொடங்கிவைத்த தனித்துவ அரசியலின் எச்சசொச்சங்களாக மாறியிருப்பதும் அதனை மட்டுமே மூலதனமாகக்கொண்டு அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதும் துரதிஷ்டவசமானதே. இந்நிலையில் அஸ்ரப் அவர்களுக்குள்ளிருந்த இலட்சியங்களும் அரசியல் திராணியும் இன்றைய முஸ்லிம் அரசியலில் காணாமல் போயிருக்கின்றன.

முஸ்லிம் முதலமைச்சர் பற்றிபேசுகின்றவர்கள் இங்கு இன்னுமொரு விடயத்தையும் மறந்துவிடக்கூடாது. அதாவது, கிழக்கு மாகாணசபை என்பது மூன்று இனங்களும் ஏறத்தாள சரிசமனாக விகிதாசாரத்தில் வாழுகின்ற பிரதேசமாகும். இங்கு யார் முதலமைச்சராக இருந்தாலும் அவர் மூவினமக்களுக்குமான முதலமைச்சரே ஆவார்! எனவே, மூவினமக்களுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய, இனரீதியான கண்ணோட்டங்களுக்கப்பால் மூவினமக்களினதும் நியாயமான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய, அவர்களோடு நீதியாக நடந்துகொள்ளக்கூடிய தகுதியும் பண்பும் ஆளுமையும், நிதானமும், முதிர்ச்சியும் கொண்ட ஒருவர் முதலமைச்சராக உருவாகவேண்டும்

இந்த அத்தனை தகுதிகளையும் கொண்ட ஒருவர் முஸ்லிமாகவும் இருந்தால் நாம் சந்தோசப்படமுடியும். மாற்றமாக இந்தத் தகுதிகள் இல்லாத ஒருவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக முதலமைச்சராக்கப்பட வேண்டும் என நாம் சிந்தித்தால் அது இனவாத அரசியல் மனோநிலையின் பிரதிபலிப்பு என்றே நான் எண்ணுகின்றேன்.

இங்கு ஒரு உதாரணத்தைச் சொல்லமுடியும்.

எமக்கு கடும்நோய் ஏதும் ஏற்பட்டு விட்டால் நாம் அந்த நோயைக் குணப்படுத்தவல்ல தகுதியும், திறமையும் கொண்ட ஒரு வைத்தியரைத்தான் தேடுவோமே தவிர எமது இனத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர்தான் எமக்கு வைத்தியம் பார்க்கவேண்டும் என எதிர்பார்ப்பது கிடையாது. அதுபோலவே கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு நீதியாகவும், நடுநிலையாகவும், சுதந்திரமாகவும், தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான தலைமைத்துவத்தினை வழங்கக்கூடிய ஒருவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக வருவதே அவசியம் என்பது எமது நிலைப்பாடாகும்.

எனவே, எந்த இனத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என்பதை விடவும் எந்தத் தரத்தையுடயவர் முதலமைச்சராக வேண்டும் என்பதுவே அதிக முக்கியத்துவம் பெறுதல் வேண்டும்

மாற்று அரசியலுக்கான இடைவெளியினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் நிரப்ப முடியுமா..?

முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் வழிமுறையாக உருவாக்கப்பட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை இழந்துவரும் நிலையில் அதற்கான மாற்றீடாக PMGG எப்படி அமைய முடியும் என்பதனை நான் இங்கு தெளிவுபடுத்த வேண்டும். பெரும்பான்மைக்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் மிகநீண்டகாலமாக சிக்கிக்கிடந்த வடகிழக்கு முஸ்லிம்களின் அரசியலை மீட்டெடுத்து அவர்களின் குரலை ஒரு தனித்துவமான சுதந்திரமான அரசியல் குரலாக கட்டமைக்கும் அரசியல் போராட்டமாகவே முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஆரம்பித்தது.

1988 முதல் நடந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் வடகிழக்கு முஸ்லிம்கள் இக்கட்சி தமக்கான சுதந்திரக்குரல் என்ற நம்பிக்கையிலேயே அமோக ஆதரவினை வழங்கி வந்தார்கள்.

கடந்த கால்நூற்றாண்டுகால அரசியல் வரலாற்றில் அக்கட்சியானது தனது கடமைகளையும், பொறுப்பினையும் நேர்மையான முறையில் நிறைவேற்றவில்லை என்றே இப்போது பரவலாக உணரப்படுகின்றது.

அதனது அரசியல் வழிமுறை, இலக்குகள், இந்நாட்டுக்கும் ஏனைய சமூகங்களுக்குமான அதனது கடமைகள், முஸ்லிம் அரசியலைச் சூழ்ந்திருக்கும் யதார்த்தங்கள் என்பன பற்றியெல்லாம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அக்கட்சியினால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் விழிப்புணர்வு என்ன..?

முஸ்லிம்களின் பிரச்சினைகளை சமூகத்தின் உள்ளேயும், வெளியேயும் பேசுவதற்காக வேனும் சுதந்திரமான எந்தவொரு ஊடகத்தையும் இவர்களால் ஏன் உருவாக்க முடியாமல் போனது..? தொலைத்தொடர்பு அமைச்சு போன்ற பெரும்பெரும் அமைச்சுப்பதவிகளையெல்லாம் தன்னகத்தே கொண்டிருந்த இக்கட்சியினால் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கான அனுமதிப்பத்திரத்தையேனும் பெற்றுக்கொள்வது பற்றி ஏன் சிந்திக்க முடியவில்லை? தேர்தல் பிரச்சாரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் இந்தக் கட்சியால் ஒரு சாதாரண விடயமான இணையத்தளம் ஒன்றைக்கூட முஸ்லிம்களுக்காக அல்லது தனது கட்சிக்காக வேனும் நடாத்த முடியாமல்போனது ஏன்..?

கடந்த 30 வருடகால இனப்பிரச்சினையிலும், யுத்தத்திலும் மிகமோசமான அழிவுகளைச் சந்தித்த வடகிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவது ஒரு புறமிருக்க, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் போன்ற சாதாரண விடயங்களில்கூட குறிப்பிட்டுச் சொல்லும்படியும் எதனையும் சாதிக்க முடியாமல் இவர்கள் திணறுவது ஏன்..?

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் முஸ்லிம்களும் ஒரு தரப்பு என்பது மிகப்பலமான நியாயமாக இருந்தும்கூட நடைபெற்ற எந்தவொரு பேச்சுவார்த்தைகளின்போது உரிய அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ள இந்தக் கட்சியால் முடியாமல் போனது ஏன்? சர்வதேச சமூகத்தினர் தமிழ் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு கொடுக்கின்ற மரியாதையை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொள்ளும் இவர்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது ஏன்?

மக்களின் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக ஏதாவதொரு வெகுஜனப் போராட்டங்களை இக்கட்சியினால் இதுவரை முன்னெடுக்க முடிந்திருக்கிறதா..?

முஸ்லிம்களின் பிரச்சினைளை பிரச்சாரப்படுத்துவதற்கு இந்தக்கட்சியினால் கூட்டப்பட்ட மாநாடுகள், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், வெளிக்கொணரப்பட்ட வெளியீடுகள் என்று ஏதாவது இருக்கின்றனவா..?

சட்டத்தரணிகளை மிக அதிகமாகக் கொண்டுள்ள இக்கட்சியினால் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான சட்டரீதியான தீர்வுகளைத் தேடி இதுவரை எத்தனை வழக்குகளை தாக்கல் செய்ய முடிந்திருக்கிறது..?

உதாரணமாக பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகளினது 1800க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சட்டரீதியான தீர்வுகளைத்தானும் பெற்றுக்கொடுக்க இக்கட்சியினால் ஏன் இதுவரை முடியவில்லை..?

தமிழ் முஸ்லிம் மக்களுக்கென பொதுவான பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்ற நிலையில் அவர்களோடு இணைந்து பிரச்சினைகளை வென்றெடுப்பதற்கான உருப்படியான முயற்சிகள் எதையாவது இக்கட்சியிளால் இதுகாலவரையில் செய்ய முடிந்திருக்கிறதா..?

18 ஆவது திருத்த சட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதன் மூலம் தற்போதைய ஜனாதிபதியினதும், அவரது அரசாங்கத்தினதும் ஆட்சியினை ஸ்திரப்படுத்திக் கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் சமூகத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் எதனை சாதித்துக் கொடுத்திருக்கிறது…? சமுகத்திற்காகவே அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளோம் எனக்கூறும் இவர்களால் இதுவரை தீர்க்கப்பட்ட சமுகப்பிரச்சினைகள் எவை?

தமது சாதாரண அபிவிருத்திப்பிரேரனைகள்கூட அரசாங்கத்தினால் கணக்கெடுக்கப்படுவதில்லை என அக்கட்சியின் செயலாளர் பகிரங்கமாக புலம்புகின்றநிலை இன்று ஏன் ஏற்பட்டிருக்கிறது.? முஸ்லிம்களின் மிகஅடிப்படை உரிமைகளை பாதிக்கின்ற தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில்கூட ஒரு சில அறிக்கைகளுக்கு அப்பால் இந்தக்கட்சியினால் எதனையும் செய்து விடமுடியாத கையறுநிலையில் முஸ்லிம்களுக்கென உருவாக்கப்பட்ட இந்த தனித்துவ அரசியல்கட்சி இன்று ஏன் சிக்கித்தவிக்கிறது.?

காலம் காலமாக முஸ்லிம்களின் மத கலாச்சார விடயங்களுக்குப் பொறுப்பாக பிரத்தியேகமான முறையில் காணப்பட்டுவந்த முஸ்லிம் கலாச்சார அமைச்சினைக்கூட தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இன்று எமது மத கலாச்சாரவிடயங்களுக்கான அனுமதிகோரி பௌத்த கலாசார அமைச்சிடம் கையேந்த வேண்டியநிலை எமக்கு ஏன் ஏற்பட்டிருக்கின்றது?

இந்தக் கேள்விகள், முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் கட்சியென உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு மக்கள் வழங்கிய ஆனையினைக் கொண்டு தனது சமூகத்திற்கான கடமைகளை நிறைவேற்றவில்லை என்பதையே சுட்டிநிற்கின்றன.

அடுத்த பக்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்கள் விடயத்தில் அதன் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்களினால் முஸ்லிம் காங்கிரஸ் விட்ட தவறுகளை சரிப்படுத்த முடிந்ததா என்றால் அதுவும் நடக்கவில்லை.

தம்புள்ள பள்ளிவாயல் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சூடான அறிக்கைகளை மாத்திரமாவது விட்டிருக்கின்றபோது, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா போன்றவர்களோ ‘தம்புள்ளைப் பள்ளிக்கு எதுவுமே நடக்கவில்லை, அத்தனையும் பொய்பப் பிரச்சாரமாகும்’ என முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் வகையிலான அறிக்கைகளை விட்டு பேரினவாத சக்திகளின் காலடியில் சரணடைந்திருக்கிறார்கள். அதாவுள்ளா போன்றவர்களோ இவ்விடயத்தில் எதுவும் கூறாமல் தமக்கும் முஸ்லிம் சமுகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதைப்போல அடங்கிக்கிடக்கிறார்கள்.

மேலேயுள்ள கேள்விகளும், அவதானங்களும் இன்று மேலோங்கியிருக்கின்ற நிலையில்தான் முஸ்லிம் சமூகத்தில் மாற்று அரசியல் வழிமுறைக்கான தேவைபற்றி அதிகம் உணரப்படுகின்றது.

தோல்விகளுக்கான காரணங்கள் என்ன.?அதன் அடிப்படையிலான தீர்வு எப்படி அமைய வேண்டும்.?

முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் வழிமுறை ஏன் காலப்போக்கில் தோற்றுப்போனது..? அதற்கான காரணங்கள் என்ன..? என்பவற்றை தெளிவாகப் புரிந்துகொண்டால் மாத்திரமே இதற்குத் தீர்வான மாற்று அரசியல் ஒன்று பற்றி சிந்திக்கமுடியும்.

முஸ்லிம் தனித்துவ அரசியலை முன்னெடுத்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடத்தில் தேர்தலுக்கு உபயோகப்படும் வெற்றுகோசங்கள் சில இருந்தனவே தவிர முறையான கொள்கை வகுப்புக்களோ, அதனடிப்படையிலான இலக்குகளோ அதனை கட்டம் கட்டமாக அடைவதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளோ இருக்கவில்லை. 87களில் அக்கட்சியினால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம் மாகாண கோரிக்கை என்பது எந்த ஆய்வுகளும், திட்டங்களும் இல்லாத ஒரு தேர்தல் கோசம் மாத்திரமே என்பதனை அக்கட்சியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் என்னிடம் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் கொள்கைவாத சமூக அரசியல் ஒன்றினை முன்னெடுக்கக்கூடிய கூட்டுத்தலைமைத்துவ கட்டமைப்பும் அக்கட்சியிடம் இருக்கவில்லை. மாறாக அஸ்ரப் என்கின்ற தனிமனித ஆளுமையினை மாத்திரம் நம்பியும் அந்த ஆழுமைக்கு முழுமையாக கட்டுப்பட்டுமே அக்கட்சி வழி நடாத்தப்பட்டது.

கால ஓட்டத்தில் சர்வாதிகாரமிக்க யாரும் கேள்விக்குட்படுத்த முடியாத தலைமையாக அக்கட்சியின் தலைவர் உருவானதால் உட்கட்சி ஜனநாயகம் அங்கு இல்லாமல் போனது. இதன்காரணமாக அடிமட்ட சமூகத்தின் உணர்வுகள் கட்சியின் தீர்மானங்களில் பிரதிபலிக்கும் நிலைமை இல்லாமல் போனது.

எனவேதான், அந்த ஆளுமை இல்லாமல் போனதைத் தொடர்ந்து அந்தக் கட்சி வேகமாக வீழ்ச்சி கண்டது.

அடுத்ததாக சமூக அரசியல் போராட்டமாக தொடங்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அப்பட்டமான முறையில் சந்தர்ப்பவாத, பிழைப்புவாத அரசியலாகவும்,  வியாபார அரசியலாகவும் மாறிப்போனது. முஸ்லிம் அரசியல் விடுதலைப் போராட்டம் எனக்கூறப்பட்ட இந்த அரசியலை முன்னின்று நடத்தியவர்களுக்கு அதிகாரங்களும் பதவிகளும் கிடைத்தபொழுது அவர்கள் பெரும்பெரும் இலட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறிப்போனார்கள். நமது நிலை அப்படியே இருக்க நமக்காக போராடுவதாகக்கூறி முன்வந்தவர்கள் வேறு எந்த தொழிலும் செய்யாமலேயே எப்படி செல்வந்தர்களாக ஆகினார்கள் என்பதனை புரிந்துகொள்ள முடியாமல் முஸ்லிம் சமூகம் குழம்பிப்போனது. கட்சியின் அடுத்தடுத்த கட்டத்தில் இருந்தவர்களும் தமது தலைவர்கள் முஸ்லிம் அரசியல் மூலமாக செல்வந்தர்கள் ஆனதைக்கண்டு தமக்கும் ஏதாவது இலாபம் கிடைக்கவேண்டுமென ஏங்கி அதன்படியேசெயற்படத் தொடங்கினார்கள்.

கட்சியின் இலட்சியங்களும் வழிமுறைகளும் மாறத்தொடங்கியபோது அது சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு தேர்தல் கால உறவாக மாத்திரம் சமூகத்துடனான கட்சியின் உறவுமாறிப்போனது. மொத்தத்தில் சமூகஅரசியல் போராட்டமென ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் தனிநபர் பதவிகளுக்காகவும் இலாபங்களுக்காகவும், பேரம் பேசுகின்ற வியாபார அரசியலாக மாறிப்போயுள்ளது.

பதவிகளும், பொறுப்புக்களும் என்பது சமூகத்திற்குரிய அமானிதங்களேயன்றி தனிநபர் சொத்துக்கிடையாது என்ற சமூக அரசியல் கோட்பாட்டினை முஸ்லிம்  காங்கிரஸ்ஸினால் அமுல்படுத்த முடியாமல்போனதன் விழைவாகவே அதிகாரப்போட்டிகளும், உட்கட்சிசண்டைகளும் தலைதூக்கின.

இதன் விழைவாக சமூக ஒற்றுமைக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சியே தமது தேர்தல் வெற்றிகளுக்காக பிரதேசவாதத்தை ஊக்கப்படுத்தி சமூகப்பிளவுகளைத் தோற்றுவிக்கும் துரதிஸ்டம் ஏற்பட்டது.

அரசியலில் முன்மாதிரியான ஒழுக்கவிழுமியங்களை கொண்டிருக்கவேண்டிய முஸ்லிம் சமூக அரசியல்வாதிகள் கீழ்த்தரமான, வழமையான அதே அரசியல் வழிமுறைகளையே பின்பற்றத் தொடங்கினர்.

பொய், ஏமாற்று, வாக்குமீறல்கள், கழுத்தறுப்பு, வன்முறைகள், கொலை முயற்சிகள், ஊழல்மேசடிகள், மார்க்கத்திற்குவிரோதமான நடவடிக்கைகள் என அத்தனை அசிங்கங்களையும் கொண்டதாகவே முஸ்லிம் அரசியலும் வளர்ந்து வந்தது.

விளைவாக, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் எவராலும் கணக்கிலெடுக்கப்படாத பிரச்சினைகளாக மாறியிருப்பது மாத்திரமின்றி முஸ்லிம் அரசியல் வாதிகளும் தமக்கிருந்த மரியாதயை ஏறத்தாள இழந்தே விட்டார்கள்.

மொத்தத்தில் முஸ்லிம் சமூகத்தின் முகவரி இன்று சுயமரியாதை அற்ற ஒன்றாகவே மாறியிருக்கிறது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இதற்குத் தீர்வாக எதனை முன்வைக்கிறது..?

இந்நிலையில்தான் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பின்னடைவுகளுக்கான காரணங்களாக அடையாளப்படுத்தப்படும் மேற்சொன்ன விடயங்களுக்குத் தீர்வாக அமையும் அம்சங்களைக்கொண்ட அரசியல் வேலைத்திட்டம் ஒன்றினை PMGG முன்னெடுத்திருக்கின்றது.

தனிமனித ஆளுமைகளை மாத்திரம் நம்பியிருக்காத சூறா எனும் கூட்டுத்தலைமைத்துவ ஒழுங்கினை நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அரசியல் விடயங்களைத் தீர்மாணிக்கின்றவர்களாக எந்தவொரு தனிமனிதனுமன்றி அந்த சூறாசபையே உச்ச அதிகாரம் கொண்ட அரசியல் தலைமைத்துவமாக இயங்கி வருகின்றது. அந்தத் தலைமைத்துவத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துபவர்களாக மாத்திரமே அதன் பிரதிநிதிகள் இயங்குகின்றனர்.

மக்கள் சார்பாக கிடைக்கும் அதிகாரங்களும் பதவிகளும் மக்களுக்கே சொந்தமானது என்பதனையும் அவை அமானிதமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனையும் உறுதிப்படுத்தும் வகையில் எமது பிரதிநிதிகளால் பள்ளிவாயல்களில் சத்தியப்பிரமானம் செய்யப்படும் நடைமுறையையும், பதவிகளிலிருந்து காலத்திற்குக்காலம் மீளழைப்புச் செய்யப்படும் முறையினையும் நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

‘அதிகாரம் மனிதனைக் கெடுக்கும்’ என்ற இயற்கையதார்த்தத்தின் அடிப்படையில் பதவிகளிலிருந்து எமது பிரதிநிதிகளை காலத்திற்குக்காலம் மீளழைப்புசெய்வதன் மூலமாக அதிகாரப்போட்டிகளைத் தவிர்க்கமுடியும் என்பதோடு, பதவிகளுக்கு யாரும் நிரந்தர சொந்தக்காரர்கள் அல்ல என்ற புதிய அரசியல் கலாசாரத்தையும் உருவாக்கவும் முயற்சிக்கின்றோம்.

மக்கள் சார்பாக கிடைக்கும் பதவிகள் மூலமாக கிடைக்கும் கொடுப்பனவுகளையும், மற்றும் ஏனைய நன்மைகளையும் சொந்தத் தேவைகளுக்கு யாரும் பயன்படுத்த முடியாது என்ற கோட்பாட்டை அமுல்படுத்துவதன் மூலமாக அரசியல் என்பது தனிமனித பிழைப்பாகவும், பணம் சம்பாதிக்கும் வழிமுறையாகவும்; மாறியிருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கின்றோம்.

முஸ்லிம் தனி மனிதன் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய உண்மை, வாய்மை, சத்தியம், நீதியுணர்வு, பாரபட்சமின்மை, சகோதரத்துவம் என்ற அத்துனை அம்சங்களும், பண்புகளும் அரசியல் நடவடிக்கைகளிலும் கண்டிப்பாக பிரதிபலிப்பதனை உறுதிப்படுத்துகின்றோம்.

வன்முறைகளும், பொய்யுரைப்புகளும், சதிநடவடிக்கைகளும் இல்லாமல் தேர்தல்களத்தில் நின்றுபிடிக்க முடியாது என தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மனோநிலையினை தகர்த்து தேர்தல்களத்தில் உண்மை, சகோதரத்துவம்., நேர்மையான அனுகுமுறைகள், மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளிக்கின்ற பண்பு, அடுத்தவர்களின் மானத்தையும், மரியாதைகளையும், உரிமைகளையும் பாதுகாக்கின்ற பொறுப்புணர்வு என்பவற்றை கண்டிப்பாக பேணும்வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றோம். சூழலை மாசுபடுத்துகின்ற, தனியார் அல்லது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துகின்ற வகையில் பட்டாசு கொழுத்துதல், பொலிதீன் பாவனை, போஸ்டர் ஒட்டுதல் போன்ற வழமையான தேர்தல்கால நடவடிக்கைகளை மொத்தமாகத் தவிர்க்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றினை மக்கள் மத்தியில் உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கிறோம்.

இந்த வழிமுறைகளின் காரணமாக தேர்தல் வன்முறைகளை எம்மால் கணிசமான வகையில் குறைக்க முடிந்திருப்பதோடு, ஏனையவர்களுக்கும் இவ்வாறான நாகரீக நடைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தநிலையினை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இந்த சாக்கடை அரசியலில் நாம் பங்குபற்ற முடியாது என உலமாக்களும் படித்தவர்களும் பண்புள்ள மனிதர்களும் அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கும்நிலைக்கு முற்றுப்புள்ளிவைத்து அவர்களும் அரசியலில் நேரடியாக பங்குபற்றக்கூடிய கௌரவமான,  பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

இனவாதம், பிரதேசவாதம், பாரபட்சம் இன ரீதியான முன்னிலைப்படுத்துதல், அல்லது புறக்கணிப்பு, சுரண்டல், அடக்குமுறை போன்ற காரணிகளே இந்தநாட்டின் தேசிய பிரச்சினையாக மாறியிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு அடிப்படைக்காரணம் எனலாம். இதிலேயே முஸ்லிம் சமூகமும் சிக்குண்டு பாதிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, நீதியும், சமத்துவமும், தர்மமும், இனப்பாகுபாடற்ற மனோநிலையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற சூழ்நிலையும், பொறுப்புக்கூறும் தன்மையும், வெளிப்படைத்தன்மையும், அர்த்தபூர்வமான ஜனநாயக சூழலும் கொண்ட ஒரு நல்லாட்சியினை உருவாக்குவதுதேயே தேசியப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படையாக அமையும் என நம்புகின்றோம்.

இதனைச் சாதிப்பதற்கு மக்களின் விழிப்புணர் வுமிகவும் அடிப்படையானதாகும். எனவேதான் மக்களை விழிப்பூட்டுகின்ற சந்தர்ப்பங்களாக தேர்தல்களங்களையும், ஏனைய காலங்களையும் நாங்கள் பயன்படுத்துகின்றோம்.

அரசியல் தீர்மானங்களை உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாகவும், யதார்த்தங்களின் அடிப்படையிலும், நீதியாகவும் மேற்கொள்ளும் வகையில் மக்களுக்கு அறிவூட்டி, வழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம். இதற்கென ‘புதிய நாளை’ என்ற பத்திரிகையினை இலவசமாக காலத்திற்குக்காலம் வெளியிடுவதோடு; ஏனைய வெளியீடுகளையும் தொடர்ச்சியாக வெளியிட்டும் வருகிறோம்.

மக்களை ஒரு கொள்கைவாத சமூக அரசியலின்பால் வழிப்புணர்வூட்டுவதற்காகவும், பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காகவும் www.pmgg.org எனும் இணையத்தளத்தினையும் நாம் நடாத்திவருகின்றோம்.

மக்களுடனான தொடர்பை தேர்தல்காலங்களில் மாத்திரம்மட்டுப்படுத்திக் கொள்ளாமல் மக்களுக்கான பல்வேறு சமூக வேலைத்திட்டங்கள் மூலமாகமக்களுடன் நெருக்கமான உறவுகளை தொடர்சிசியாக பேணிவருகின்றோம்.

இலவச கல்வி மையங்கள், கல்வி உக்குவிப்புக் கொடுப்பனவுகள், இலவச மருந்து விநியோகம், மருத்துவ முகாம்கள், வாழ்வாதார உதவிகள், சகாத் விநியோகத் திட்டம் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் எமது சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அடங்குகின்றன.

மேலும், கடந்த மூன்று வருடங்களாக வறிய மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகளை வருடாந்தம் வழங்கி வருகின்றோம். கடந்த வருடம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, முதூர் அடங்கலாக தமிழ் சிங்கள பிரதேசங்களில் ஏறத்தாள பத்தாயிரம்மாணவர்களுக்கு இந்த இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்கியிருக்கின்றோம்.

இவ்வாறே முஸ்லிம் அரசியலில் மாற்று அரசியல் வழிமுறையாக PMGG செயற்பட்டு வருகின்றது.

PMGG  யின் வளர்ச்சி பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா..?

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி நகரசபைத் தேர்தலிலேயே PMGG ஒரு அரசியல் இயக்கமாக மக்கள் முன் அறிமுகம் செய்யப்பட்டு மூன்றுமாதங்களில் முதலாவது தேர்தலை எதிர்கொண்டது. காத்தான்குடிப் பிரதேசத்தில் மிகநீண்டகால அடித்தளத்தையும், பிரபல்யத்தையும் கொண்டுள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகிய அரசியல் தரப்புக்களை எதிர்கொண்டே எமது இயக்கம் தேர்தலில் களமிறங்கியது.

இருப்பினும் அந்த முதலாவது தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 வீதமான 3223 வாக்குகளைப் பெற்று நகரசபையில் 1 ஆசனத்தை நாம் பெற்றுக்கொண்டோம்.

கடந்த 2011 மார்ச் மாதம் நடைபெற்ற காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் 6809 வாக்குகளைப் பெற்று (35%) இரண்டு ஆசனங்களைப் பெற்று அங்கு பிரதான எதிர்கட்சியாக நாம் தற்போது இருக்கின்றோம்.

கடந்த இரண்டு தேர்தலுக்கும் இடையில் எமதுவளர்ச்சியானது 111 வீதமாக இருக்கின்றது. மேலும், கடந்த ஆண்டு மட்டக்களப்பில்நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட மொத்தவாக்குகளைவிடவும் காத்தான்குடியில் மாத்திரம் PMGG பெற்றுக்கொண்ட வாக்குகள்அதிகமாகும.

PMGGயின் கொள்கைகளும், வேலைத்திட்டங்களும் முஸ்லிம் சமூக அரசியலில் ஒரு நல்ல மாற்றீடாக வேகமாக அங்கீகரிக்கப்பட்டு வருவதனை இது காட்டுகின்றது.

எதிர்வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் PMGG என்ன திட்டங்களைக் கொண்டிருக்கிறது..?

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதென கடந்த 19.05.2012 அன்று கூடிய எமது சூறாசபை தீர்மாணித்துள்ளது. இதற்கென ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் ஏனைய பிரதேசங்களில் கலந்தாலோசனைகளையும், வேலைத்திட்டங்களையும் நாம் தொடங்கவுள்ளோம்.

இதன்பொருட்டு ஏனைய பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக எமது சூறாசபை விரிவாக்கப்படவிருக்கின்றது.

இத்தேர்தலில் மட்டக்களப்பில் குறைந்தது ஒரு ஆசனத்தை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்றோம். இன்ஷா அல்லாஹ்.

இதுபோல திருகோணமலை மாவட்டத்திலும் மாற்று அரசியல் வேலைத்திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தும் கலந்துரையாடல்களையும் விரைவில் தொடங்கவுள்ளோம். ஏனைய பிரதேசங்களைப்போலவே முற்போக்கான சமூக அரசியல் வேலைத்திட்டம் ஒன்றுக்கான தேவை திருகோணமலை மாவட்டத்திலும் தீவிரமாக உணரப்படுகின்றது.

இவ்வாறான மாற்று அரசியல் ஒன்றினை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ள குழுக்கள், அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களோடு கலந்துரையாடல்களைச் செய்வதற்கும் அதன் மூலமாக அவர்களது அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் அறிந்துகொள்வதற்கும் நாம் ஆர்வம் கொண்டுள்ளோம். இன்ஷா அள்ளாஹ் இதற்கான கலந்துரையாடல்களை விரைவில் ஏனைய பகுதிகளிலும் நடாத்தவதற்கு உத்தேசித்துள்ளோம்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments